PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM

'இவரை நம்பி எப்படி ஐந்தாண்டு காலம் ஆட்சியை நடத்துவது...' என, மஹாராஷ்டிர துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், அம்மாநில பா.ஜ.,வினர்.
மஹாராஷ்டிராவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்த தேர்தலில், பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அந்த கட்சியின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். இவருக்கு முன், முதல்வராக இருந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியே கிடைத்தது.
இதனால் கடும் மன உளைச்சலில் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, அவ்வப்போது தன் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, 'என்னை மற்ற அரசியல்வாதிகளை போல நினைத்து விடாதீர்கள்; நான் வித்தியாசமான அரசியல்வாதி.
'என் தன்மானத்துக்கு இழுக்கு வந்த போது, சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்ததுடன், அந்த கட்சியின் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரேயை முதல்வர் பதவியில் இருந்தும் கவிழ்த்தேன்.
'இனியும் அப்படி தான் இருப்பேன். எனக்கு தன்மானம் தான் முக்கியம். எப்போது வேண்டுமானாலும், எந்த முடிவையும் எடுப்பேன்...' என, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
இதை கேள்விப்பட்ட, பாஜ.,வினர், 'கூட்டணியில் இருந்து இவரை கழற்றி விடுவது தான் நமக்கு நல்லது. ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது என்பதை, அவருக்கு புரிய வைக்க வேண்டும்...' என, கடுப்புடன் கூறுகின்றனர்.