PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM

'குடும்பத்துடன் பாட்டு பாடியே ஓட்டு வாங்கிடுவார் போலிருக்கிறதே...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் பற்றி கிண்டலாக பேசுகின்றனர், இங்குள்ள எதிர்க்கட்சியினர்.
இங்கு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா,சிறந்த பாடகர். ஏராளமான இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது, மனைவியின் இசையில் தேவேந்திர பட்னவிசும் ஐக்கியமாகி உள்ளார். சிவராத்திரியை ஒட்டி சமீபத்தில், ஒரு ஆன்மிக இசை ஆல்பத்தை வெளியிட்டார், அம்ருதா. இதில், 'தேவாதி தேவா...' என துவங்கும் பாடலை, பட்னவிசே எழுதியுள்ளார்.
இந்த பாடலை அம்ருதா பாடியுள்ளார். மஹாராஷ்டிராவில் உள்ள பல சிவன் கோவில்களில் இப்போது இந்த பாடல் தான் ஒலிக்கிறது.
இதற்கு கிடைத்த வரவேற்பை வைத்து, அடுத்ததாக லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு பா.ஜ., மற்றும் மோடியின் பெருமைகளை விளக்கும் பாடல்களை எழுத திட்டமிட்டுள்ளார், பட்னவிஸ். இந்த பாடல்களையும் அம்ருதாவே பாடவுள்ளார்.
மஹாராஷ்டிரா முழுதும் தேர்தல் பிரசாரங்களில் இந்த பாடல்களை ஒலிபரப்பவும் பட்னவிஸ் முடிவு செய்துள்ளார்.
'அதிக, 'ரிஸ்க்' எடுக்காமல் பாட்டு பாடியே பதவியை பிடிக்க பட்னவிசும், அவரது மனைவியும் திட்டமிட்டுள்ளனர். நல்ல இசைக் குடும்பம் தான்...' என்கின்றனர், எதிர்க்கட்சியினர்.

