PUBLISHED ON : ஜூன் 09, 2024 12:00 AM

'ஒரு காலத்தில் எவ்வளவு செல்வாக்காக இருந்த கட்சி, இப்போது இப்படி ஆகி விட்டதே...' என, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் பரிதாப நிலை குறித்து கவலைப்படுகின்றனர், உத்தர பிரதேசத்தில் உள்ள மக்கள்.
இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உ.பி.,யில் நான்கு முறை முதல்வராக பதவி வகித்த பெருமைக்குரியவர் மாயாவதி.
காங்கிரஸ், பா.ஜ., ஆகிய தேசிய கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்; அதிரடியான தடாலடி அரசியலுக்கு பெயர் பெற்றவர். ஊழல், ஆடம்பர செலவு போன்றவற்றால் ஆட்சியை பறிகொடுத்த மாயாவதி மீது ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த சில தேர்தல்களாகவே பகுஜன் சமாஜ் கட்சி தேய்ந்து வருகிறது.
கடந்த, 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மாயாவதி, 10 தொகுதிகளை அள்ளினார்; சமாஜ்வாதிக்கு ஐந்து தொகுதிகள் தான் கிடைத்தன.
ஆனால், தற்போதைய தேர்தலில், 79 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
ஆனால், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமாஜ்வாதி, 37 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. தொடர் தோல்விகளால் மாயாவதியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
'இந்த தேர்தலை துவக்கத்தில் இருந்தே வேண்டா வெறுப்பாகத் தான் மாயாவதி கையாண்டார்; தீவிர பிரசாரம் கூட செய்யவில்லை. இனி, அவரது கட்சி தலையெடுப்பது சிரமம் தான்...' என்கின்றனர், உ.பி., அரசியல்வாதிகள்.