PUBLISHED ON : மே 26, 2024 12:00 AM

'அவருக்கு ஒரு நியாயம்; இவருக்கு ஒரு நியாயமா...' என கொந்தளிக்கின்றனர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிர்வாகிகள்.
ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இவருக்கு முன் முதல்வராக இருந்தவர், அந்த கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன்.
இவர், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிக்கி, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுமே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, தன் கட்சியின் மூத்த நிர்வாகியான சம்பாய் சோரனை முதல்வராக்கி விட்டு தான் சிறைக்கு சென்றார்.
இதேபோல், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்து, அமலாக்கத் துறையினர் சிறையில் அடைத்தனர்.
ஆனால் அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கோரி, ஜாமினில் வெளியில் வந்து விட்டார். இதே காரணத்தை கூறி, ஹேமந்த் சோரனும் ஜாமின் கேட்டார். அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.
இதனால் கவலை அடைந்துள்ள அவரது கட்சி நிர்வாகிகள், 'நம் தலைவர் அவசரப்பட்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். பதவியில் இருந்திருந்தால், கெஜ்ரிவாலை போல, இவருக்கும் ஜாமின் கிடைத்திருக்கும். நல்லதுக்கு காலமில்லை...' என்கின்றனர்.