PUBLISHED ON : மே 01, 2024 12:00 AM

'இப்படி கோமாளித் தனம் செய்தால் கட்சி எப்படி உருப்படும்...' என்கிறார், ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்.
இங்கு, முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், காங்கிரசின் அசோக் கெலாட் முதல்வராக இருந்தார். அப்போது, 'இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்குங்கள்...' என, கட்சி மேலிடம் அவரிடம் வற்புறுத்தியது.
கெலாட், இதை ஏற்க மறுத்தார். ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து, பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்தது. 'கெலாட் தான், இந்த தோல்விக்கு காரணம்...' என பலரும், அவரை கடுமையாக விமர்சித்தனர்.
இந்த களேபரங்களுக்கு இடையில், சமீபத்தில் ராஜஸ்தானில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. காங்கிரஸ் மாநில தலைவரான கோவிந்த் சிங், வாக்காளர்களிடம் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்தார்.
நாட்டுப்புற நடனமாடி வாக்காளர்களிடம் பிரசாரம் செய்தார். இசைக் கருவிகள் இசைத்தால், உடனடியாக காரை விட்டு இறங்கி, நடனமாடத் துவங்கி விடுவார்.
கெலாட்டோ, 'இதுவரை கட்சி செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். இல்லையெனில், இனி நிறைவேற்றப் போகும் திட்டங்களை கூற வேண்டும். அதை விடுத்து, நடுத்தெருவில் நடனமாடினால், ஓட்டு விழுமா? இந்த உண்மையை கூறினால், நமக்கு துரோகி பட்டம் கட்டுகின்றனர். இதெல்லாம் நல்லதுக்கு இல்லை...' என, புலம்புகிறார்.