PUBLISHED ON : ஜூன் 25, 2024 12:00 AM

'பாவம், அவருக்கு இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது...' என, மத்திய அமைச்சரும், கார்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி பற்றி பரிதாபப்படுகின்றனர், அவரது கட்சியினர்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் இரண்டாவது மகனுமான குமாரசாமி, கர்நாடகாவை பொறுத்தவரை ராசியான அரசியல்வாதி என பெயர் எடுத்தவர்.
கர்நாடக சட்டசபை தேர்தல்களில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நேரங்களில் எல்லாம், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகளுன் கூட்டணி சேர்ந்து, முதல்வராக பதவி வகிப்பது இவரது அரசியல் ஸ்டைல்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிட்டு, எம்.பி.,யான குமாரசாமிக்கு, மத்திய அமைச்சரவையில் கனரக தொழில் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அப்போது, 'கம்யூனிஸ்ட் கட்சியை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறீர்களே; ஆனால், உங்கள் கட்சியை சேர்ந்த கிருஷ்ணன் குட்டி என்பவர், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிகள் அரசில் அமைச்சராக இருக்கிறாரே...' என, சிலர் கேள்வி எழுப்பினர்.
முகம் வெளிறி போன குமாரசாமி, 'டில்லியில், கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் அதிகம் உள்ளனர் என்ற விபரத்தை முன் கூட்டியே சொல்லியிருக்க வேண்டாமா...' என, தன் உதவியாளர்களிடம் முணுமுணுத்தபடியே புறப்பட்டுச் சென்றார்.