PUBLISHED ON : ஜூலை 07, 2024 12:00 AM

'அரசியலில் செல்வாக்கு இழந்து விட்டால் இப்படித் தான்...' என, லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பசுபதி குமார் பரசை பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள். இவர், மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர்.
பீஹாரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் செல்வாக்குடன் இருந்த அரசியல்வாதி, ராம்விலாஸ் பஸ்வான். லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனரான இவர், பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சராக இருந்தார்.
உடல்நலக் குறைவால் அவர் இறந்த பின், கட்சி இரண்டாக உடைந்தது. சகோதரர் பசுபதி குமார் பரஸ் தலைமையில் ஒரு அணியும், பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானின் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகின்றன.
பஸ்வான் மறைவுக்கு பின், கட்சியின் பெரும்பாலான எம்.பி.,க்கள் பசுபதி குமார் பக்கம் இருந்ததால், மோடியின் 2.0 அரசில், அவர் மத்திய அமைச்சராக இருந்தார்.
லோக்சபா தேர்தலுக்கு முன், பசுபதியை கழற்றி விட்டு, சிராக் பஸ்வானை கூட்டணியில் சேர்த்தது பா.ஜ., மேலிடம். இவரும் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, சிராகை மத்திய அமைச்சராக்கியது பா.ஜ., தலைமை.
பசுபதி தரப்பு, தேர்தலில் போட்டியிடவே இல்லை. பீஹார் மாநிலம், பாட்னாவில் ஒரு பெரிய அரசு பங்களா, பசுபதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சிராக் அமைச்சரான அடுத்த நாளே, அந்த பங்களாவை காலி செய்ய சொல்லி விட்டது, பீஹார் அரசு.
இதனால் நொந்து போயுள்ள பசுபதி குமார் பரஸ், 'இப்படி நடுத்தெருவில் நிறுத்தி விட்டனரே...' என, கண்ணீர் வடிக்கிறார்.