PUBLISHED ON : மே 22, 2024 12:00 AM

'இது வித்தியாசமான குடும்பமாக இருக்கிறதே...' என, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தை பற்றி பேசுகின்றனர், இங்குள்ள மக்கள்.
தெலுங்கில் சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவிக்கு சில ஆண்டுகளுக்கு முன், அரசியல் ஆசை வந்து, பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் தனி கட்சி துவங்கினார்.
ஆனால், தேர்தலில் இவரது கட்சி போணியாகவில்லை. தொடர் தோல்வியால் துவண்ட அவர், கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டு, மத்திய அமைச்சரானார். அதன்பின், காங்கிரசில் இருந்தும் வெளியேறிய அவர், இப்போது மீண்டும்சினிமா மீது கவனத்தை திருப்பியுள்ளார்.
ஆனால், சிரஞ்சீவி உட்பட அவரது குடும்பத்தினருக்கு இன்னும் அரசியல் ஆசை போகவில்லை. சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில், தனக்கு வேண்டிய சில பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்தார்.
சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண், தன் சித்தப்பாவும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
சிரஞ்சீவியின் நெருங்கிய உறவினரும், நடிகருமான அல்லு அர்ஜுன், தன் நண்பரான, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுட்டார்.
இதையெல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்த ஆந்திர மக்களோ, 'எல்லா கட்சியிலும் துண்டு போட்டு வைத்து விட்டால், தங்களின் எதிர்காலத்துக்கு நல்லது என, சிரஞ்சீவி குடும்பம் நினைக்கிறது போல...' என கிண்டல் அடிக்கின்றனர்.

