PUBLISHED ON : ஜன 22, 2026 04:03 AM

பா.ஜ., தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின், நிதின் நபின் பேச்சு:
மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நடக்கவிருந்த கார்த்திகை
தீபத் திருவிழாவை, ஆளும் தி.மு.க., தடுத்து நிறுத்தியதை நாம் கண்டோம். இந்த
சம்பவம் மட்டுமல்ல; இது போன்ற பல சதி செயல்களில் தி.மு.க., ஆதரவுகட்சிகள்
ஈடுபடுகின்றன. ராமர் பாலம் இருப்பதை மறுத்தவர்களுக்கும், கார்த்திகை தீபம்
ஏற்ற விடாமல் தடுத்தவர்களுக்கும், அரசியலில் இடமே இல்லாதபடி,
வருங்காலங்களில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
பரவாயில்லையே... ராமர்
பாலத்தை சிதைக்க, தி.மு.க., முற்பட்ட விவகாரத்தை நினைவில் வைத்திருக்கிறாரே
இவர்! இப்படி வீறு கொண்டு பேசுபவர், தலைமைப் பொறுப்புக்கு வந்தது,
பா.ஜ.,வுக்கு நல்லதா, கெட்டதா என்பது போகப் போகத் தெரியும்!
பத்திரிகை செய்தி: காங்கிரஸ் அறக்கட்டளை புதிய அறங்காவலர்களாக செல்வப்பெருந்தகை, தங்கபாலு, சசிகாந்த் செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் காமராஜ ரால், கடந்த 1955-ல் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை துவக்கப்பட்டது. இந்த அறக் கட்டளைக்கு சொந்தமாக, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள காங்கிரஸ் அறக் கட்டளையைக் கைவிட, தற்போதைய அறங்காவலர்களுக்கு மனது வருமா என்ன... தங்கபாலுவெல்லாம் பழம் பெருச்சாளியாயிற்றே; இப்போது செல்வப்பெருந்தகையும் சேர்ந்து விட்டார். இனி, 'வேட்டை' தான்!
காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் பேட்டி:
காங்., கின் கூட்டணி நிலைப்பாடு குறித்து, டில்லி மேலிடம் விரைவில் அறிவிக்கும். கூட்டணி தொடர்பாக, தமிழக காங்., நிர்வாகிகள் 42 பேரிடம், தனித்தனியாக கருத்துக்களை ராகுல் கேட்ட றிந்தார். அதன் அடிப்படையில் , டில்லி மேலிடம் கூட்டணி முடிவு எடுக்கும்.
கிரிஷ் ஷோடங்கருக்கு பொறுப்பு கொடுத்த சில நாட்களிலேயே வீராவேசமாய் தமிழகத்தில் பேட்டி கொடுத்தார்; தற்போது, பல இடங்களிலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, ஈனஸ்வரத்தில் பேட்டி கொடுக்கத் துவங்கி விட்டார். காங்கிரஸ் தமிழகத்தில் ஏன் வளரவே மறுக்கிறது என்பதற்கு, இவரது கதையே சிறந்த உதாரணம்!
விலங்கின ஆர்வலரான, பா.ஜ.,வைச் சேர்ந்த மேனகா, நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பேசியது குறித்து, அந்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து:
உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளில் கவனமாக இருக்க வேண்டும். அந்த உத்தரவு எதிர்தரப்பினருக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடாது. நீதிமன்றத்தை விமர்சித்து அவர் எப்படி கருத்து தெரிவிக்கலாம்? யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என அவர் நினைக்கிறாரா? இது மிகவும் தவறானது!
இப்போதெல்லாம் நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதையும், கீழ்ப்படிவதையும் எந்த அரசியல் வாதியுமே பின்பற்றுவ தில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம். சமூக பொறுப்புடன் செயல்பட்டாலே, பல பிரச்னைகளுக்கு நீதிமன்ற வழக்குகளே தேவையில்லை என்ற அடிப்படையை, அரசியல்வாதிகள் மறந்து பல காலம் ஆயிடிச்சு!

