PUBLISHED ON : பிப் 27, 2025 12:00 AM

'என்ன தான் தலைமை பொறுப்பில் இல்லைஎன்றாலும், கட்சியில் அவர்களுக்கு வேண்டியவர்களை தவிர, வேற யாரும் வளர முடியவில்லை என்பது உண்மை தான்...' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோரை பற்றி அந்த கட்சியின் தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர்.
காங்கிரசின் தலைவர் பொறுப்பு பல ஆண்டுகளுக்கு பின் தற்போது, நேரு குடும்பம் அல்லாத ஒருவரிடம் உள்ளது. ஆனாலும், தற்போதைய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன்னை தனியாக அடையாளப்படுத்தாமல், நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியாகவே காட்டிக் கொள்கிறார்.
காங்கிரசில் நீண்ட காலமாகவே சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே முக்கியமான பதவிகள் கிடைக்கின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு.
கார்கே தலைவர் பொறுப்புக்கு வந்த பின், இதில் மாற்றம் ஏற்படும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சமீபத்தில், பல்வேறு மாநிலங்களுக்கான காங்., மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருமே, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு வேண்டியவர்கள். பூபேஷ் பாகேல், மீனாட்சி நடராஜன், கே.ராஜு போன்ற புதிய நிர்வாகிகள், ராகுல், பிரியங்காவின் தீவிர விசுவாசிகள்.
இதனால் விரக்தி அடைந்துள்ள உண்மை தொண்டர்கள், 'போஸ்டர் ஒட்டவும், கூட்டம் சேர்க்கவும் மட்டும் தான் நாங்கள் தேவைப்படுகிறோம். பதவி மட்டும் ஜால்ராக்களுக்கு போய் விடுகிறது...' என புலம்புகின்றனர்.

