PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

'இனி அரசியலில் எனக்கு எந்த பதவியும் தேவையில்லை; இதுவே போதும்...' என, நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யான சந்தீப் தீட்ஷித்.
இவர், டில்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான, மறைந்த ஷீலா தீட்ஷித்தின் மகன். ஷீலா, 15 ஆண்டுகள் டில்லி முதல்வராக பதவி வகித்தவர். கேரள கவர்னர், டில்லி காங்கிரஸ் தலைவர் போன்ற முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.
ஆனால், இவரது கடைசி கால அரசியல் மிகவும் சோகமானது. 2013ல் டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் புதுடில்லி தொகுதியில் ஷீலா போட்டியிட்டார். இதில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம், படுதோல்வி அடைந்தார்.
'மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்த நான், ஒரு ஜூனியர் அரசியல்வாதியிடம் தோல்வி அடைந்து விட்டேனே...' என, தன் குடும்பத்தினரிடம் சொல்லி ஷீலா வருத்தப்பட்டது உண்டு.
தற்போது, தன் தாயின் வருத்தத்துக்கு ஆறுதல் அளித்துள்ளார், சந்தீப் தீட்ஷித். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் புதுடில்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்ஷித் போட்டியிட்டார்.
இதில், அவர் வெற்றி பெறாவிட்டாலும், 4,500க்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றார். இந்த, 4,500 ஓட்டு வித்தியாசத்தில் தான், பா.ஜ.,வின் பர்வேஷ் வர்மாவிடம், அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, 'என் தாயின் தேர்தல் தோல்விக்கு இப்போது பழி வாங்கி விட்டேன்...' என, சந்தோஷப்படுகிறார், சந்தீப் தீட்ஷித்.

