PUBLISHED ON : மே 05, 2024 12:00 AM

'இது என்னடா, பெரிய குடும்பத்து மருமகனுக்கு வந்த சோதனை...' என கிண்டலடிக்கின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
உத்தர பிரதேச மாநிலம், அமேதி, ரேபரேலி ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, கடைசியாக அறிவித்து விட்டது, காங்கிரஸ் மேலிடம்.
ராகுல், பிரியங்கா ஆகியோர் இந்த தொகுதிகளில் போட்டியிடப் போவதாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பேசப்பட்டு வந்தது. இடையில், பிரியங்காவின் கணவரான ராபர்ட் வாத்ரா, தானாக பத்திரிகையாளர்கள் முன் ஆஜராகி, 'நான் அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது, அந்த தொகுதி மக்களின் விருப்பம்...' என்றார்.
அமேதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளோ, 'ராகுல், பிரியங்கா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் போட்டியிடலாம் அல்லது பா.ஜ.,வில் சீட் மறுக்கப்பட்ட வருண் கூட போட்டியிடலாம். ராபர்ட் வாத்ரா போட்டியிட்டால், வேலைக்கு ஆகாது...' என புலம்பினர்.
ஆனாலும், பெரிய குடும்பத்து விவகாரம் என்பதால், அமைதி காத்தனர். ஒரு வழியாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளன்று, ரேபரேலியில் ராகுலும், அமேதியில், சோனியா குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவரான கிஷோர் லால் சர்மா என்பவரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
அமேதியில் ராகுலோ, பிரியங்காவோ போட்டியிடவில்லை என்ற சோகத்தை விட, ராபர்ட் வாத்ரா போட்டியிடவில்லை என்ற சந்தோஷம், காங்., தொண்டர்களிடையே கரைபுரண்டோடுகிறது.
இதையறித்த ராபர்ட் வாத்ரா ஆதரவாளர்கள்,'எங்கள் தலைவர் அரசியலுக்கு வருவதில், இவர்களுக்கு வயிற்றெரிச்சல்...' என்கின்றனர்.