PUBLISHED ON : செப் 15, 2024 12:00 AM

'இவர் பெரிய விளம்பர பிரியராக இருப்பார்போலிருக்கிறதே...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவ் குறித்து கிண்டல் அடிக்கின்றனர், இங்குள்ள காங்., கட்சியினர்.
ம.பி., மாநில பா.ஜ.,வில் அசைக்கமுடியாத செல்வாக்குடன் வலம் வந்தவர், முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான். ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றதும்,அதிகம் அறிமுகமில்லாத மோகன் யாதவுக்குஅதிர்ஷ்டம் அடித்தது.
அவரை முதல்வராக நியமித்ததும், 'ம.பி.,மக்களில் பெரும்பாலானோருக்கு மோகன் யாதவ் யார் என்றே தெரியாது...' என, எதிர்க்கட்சியினர் கிண்டல் அடித்தனர்; இது, அவரை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.
தன்னை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில், முழு வீச்சில் களம் இறங்கியுள்ளார். அரசு நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகளில், தன் புகைப்படம் பெரிய அளவில் இடம் பெறும் வகையில் விளம்பரம் கொடுத்து வருகிறார்.
மாநிலம் முழுதும் சுற்றுப் பயணம் செய்து, ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, கட்சி நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்று, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பது என, இறங்கி அடிக்க துவங்கி விட்டார்; இதுதான், எதிர்க்கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
'முதல்வராக இருப்பவர், மக்களுடன் தொடர்பில்இருக்க வேண்டும் என, நினைப்பது தவறு இல்லையே... வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தான் இதை விளம்பரம் என கிண்டல் அடிக்கின்றனர்...'என கொதிக்கின்றனர் மோகன் யாதவ் ஆதரவாளர்கள்.