/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
அரசு ஊழியர்களை ஏமாற்றும் தி.மு.க.,!
/
அரசு ஊழியர்களை ஏமாற்றும் தி.மு.க.,!
PUBLISHED ON : ஜன 08, 2026 03:34 AM

கு.காந்தி
ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு, தொழிலாளர்களின், 10 சதவீத பங்களிப்புடன் கூடிய
புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது, தமிழக அரசு. 30 ஆண்டுகள் பணி
முடித்தவர்கள் கடைசியாக வாங்கும் ஊதியத்தில், 50 சதவீத தொகை
உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியமாக கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தை அறிவித்த முதல்வர், 2003க்கு முன்பிருந்த பழைய ஓய்வூதிய
திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த கோரி கடந்த 20 ஆண்டுகளாக போரடிக்
கொண்டிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை
நிறைவேற்றிவிட்டதாக பெருமைப்பட்டுள்ளார்.
ஆனால், 2003க்கு
முன்பிருந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கும், இப்போது ஸ்டாலின்
அறிவித்திருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கும் எவ்வித சம்பந்தமும்
இல்லை; இரண்டையும் சம்பந்தப்படுத்துவது மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும்
முடிச்சுப் போட முயற்சிப்பது போன்றது!
சுருக்கமாகச் சொன்னால்,
ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் புதிய ஓய்வூதிய திட்டம், தொழிலாளர்கள்
செலுத்தும், 10 சதவீத பங்களிப்பு தொகைக்கு, வட்டி போட்டு அவர்கள் ஓய்வு
பெற்றபின், 'பென்ஷன்' என்ற பெயரில் திருப்பி அளிக்கப்படுகிறது.
இதில், அரசின் பங்களிப்பு தொகை என்று எதுவும் இல்லை.
அரசின் பென்ஷன் திட்டத்தில் தொழிலாளர்கள் சேராமல், மாதந்தோறும்தங்கள்
ஊதியத்தில், 10 சதவீத தொகையை ஓய்வு பெறும் காலம் வரையும், ஓய்வு பெற்ற
பின்பும் ஏதேனும் வங்கியில் முதலீடு செய்தால், அரசு தரும் பென்ஷன் தொகையை
விட, அதிக வட்டி கிடைப்பதுடன், முதலீட்டு தொகையும் முழுமையாக கிடைக்கும்!
ஜாக்டோ - ஜியோ தி.மு.க., ஆதரவுசங்கம் என்பதால், அச்சங்கத்தை பயன்படுத்தி
தொழிலாளர்கள் தலையில் மிளகாய் அரைத்துள்ளது, தி.மு.க., அரசு.
இது
நேர்மையான அரசாக இருந்தால்,இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை போக்குவரத்து
மற்றும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுவதால், அவர்களை வைத்து பயனடையவே இந்த புதிய ஓய்வூதிய திட்டம்!
கடந்த 57 மாதங்களாக எதுவுமே செய்யாமல், சட்டசபை தேர்தல் நெருங்கும்
நிலையில், கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க., ஆதரவு தொழிற்சங்கங்களுடன் பேசி
வைத்து, அமல்படுத்தப்படும் தேதி கூட அறிவிக்காமல், இப்புதிய ஓய்வூதிய
திட்டத்தை அறிவித்திருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம், தி.மு.க., அரசின்
ஏமாற்று வேலையை!
மருதமலை கோவில் சுற்றுலா தலமா?
பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மருதமலையில், 184 அடி உயர முருகன் சிலை அமைப்பது தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில், முருகன் சிலை அமைப்பதால் சுற்றுலா வளர்ச்சி மேம்படும் எனக் கூறியுள்ளது, அறநிலையத் துறை.
கோவில் என்பது இறைவன் எழுந்தருளியிருக்கும் புனிதமான தலமே தவிர, எல்லாரும் வந்து பொழுதுபோக்கிச் செல்லும் சுற்றுலா தலம் அல்ல!
மேலும், தற்போது, முருகன் சிலை அமையும் பகுதியில், வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகம்.
பலமுறை டோல்கேட் அருகில் ஒற்றை யானை முகாமிட்டு, மலைப்பாதை திறக்கப்படாமலேயே பக்தர்கள் திரும்பிச் சென்ற நிகழ்வுகளும் உண்டு.
சென்ற வாரத்தில் கூட கருஞ்சிறுத்தை குட்டி ஒன்று, மலை அடிவாரத்தில் ஒரு வீட்டின் அருகே இருந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.
இப்படி வனவிலங்குகள் வந்து செல்லும் இடத்தில் முருகன் சிலை அமைப்பதால், பக்தர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், வனவிலங்குகளின் வாழ்விடமும் அழிக்கப்பட்டு, அவை ஊருக்குள் வர வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்ல... கடந்த வாரத்தில் மருதமலையில், 'வெள்ளியங்கிரி மலை பாதுகாப்பு அமைப்பு' சார்பில் நடந்த உழவாரப் பணியின் போது, இரண்டு டன் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்துள்ளனர்.
கோவிலை சுத்தமாக பராமரிக்க முயற்சி எடுக்கவில்லை; அதேநேரம், தேவையற்ற செலவுகளை செய்கிறது, அறநிலையத் துறை.
வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கோவில் வளாகத்திற்கு செல்ல, 'லிப்ட்' அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிந்த பாடில்லை.
நகரும் படிக்கட்டுகளை அமைத்திருந்தால் செலவும் அதிகம் ஆகி இருக்காது; வேலையும் விரைவில் முடிந்திருக்கும். அதேபோன்று, புதிதாக ராஜகோபுரம் கட்டும்போது, படிப்பாதையில் வழவழப்பான கற்களைப் பதித்திருந்தனர்.
மழை காலங்களில் பக்தர்கள் வழுக்கி விழுந்ததால், மேல் தளத்தை சுரண்டி, வழுக்காத வண்ணம் மாற்றி அமைத்தனர். தற்போது நடந்த கும்பாபிஷேகத்தில் பழைய கற்களை பெயர்த்து எடுத்து விட்டு, புதிதாக கருங்கல் தளம் அமைத்துள்ளனர்.
மேலும், மொட்டை அடிப்பதற்காக மலை மீது ஒரு மண்டபம் இருந்தது. அது நல்ல நிலையில் இருக்கும் போது, மலை அடி வாரத்தில், 1.9 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட முனைந்துள்ளனர்.
அத்துடன், வாகன நிறுத்தும் இடத்தை ஆக்கிரமித்து, 85 லட்சம் ரூபாய் செலவில் குளியலறை, கழிப்பறைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளனர்.
சரி... அதையாவது ஒழுங்காக பராமரிக்கின்றனரா என்றால் அதுவும் இல்லை. ஒரே துர்நாற்றம்!
மலை மீது வாகன நிறுத்து மிடத்தின் தென்புறமாக ஒரு மண்டபம் இருந்தது. அங்கு தான் விழா காலங்களில் அன்னதானங்கள் நடைபெற்றன. நல்ல நிலையில் இருந்த அந்த மண்டபத்தை இடித்து விட்டு, இப்போது புதிய கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில், நல்ல நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து, புதிய கட்டுமானங்களை செய்வது அவசியமா?
'ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே' என்பது போல், எதற்கு இந்த இரட்டை செலவு?
அதேபோன்று, மருதமலை என்பது வழிபாட்டு ஸ்தலம். இங்கு எதற்கு செல்பி பாயின்ட்? இதற்காக, பெரும் பகுதியை ஆக்கிரமித்து விட்டனர்!
வாகன நிறுத்தும் இடங்களில் கட்டடங்களை கட்டிக் கொண்டே போவதால், பரப்பளவு சுருங்கி விட்டது. இப்போது தனியார் வாகனங்கள் மேலே செல்ல தடை செய்து, பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முருகன் சிலை அமைய உள்ள பகுதிக்கு கிட்டத்தட்ட, 600 மீட்டர் தொலைவில் பாரதியார் பல்கலை அருகே வாகன நிறுத்துமிடம், பேருந்து முனையம் ஏற்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வாகனத்தில் வருவோர், பேருந்தில் வருவோர் இவ்வளவு துாரம் நடந்து வருவது சாத்தியமா? கோவிலுக்கு வரும் வயதானவர்கள், குழந்தைகள் எப்படி நடந்து வர முடியும்?
எதையும் யோசித்து ஆராய்ந்து செயல்படுத்த மாட்டார்களா?

