PUBLISHED ON : ஆக 04, 2024 12:00 AM

'பாவம் அந்த மனிதர்; எப்போதும் அவரை பீதியிலேயே வைத்திருக்கின்றனர்...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமானசித்தராமையாவை பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
கர்நாடகாவில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்றதும், முதல்வர் பதவியை பிடிக்க சித்தராமையாவுக்கும், மாநில காங்., தலைவரான சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் மேலிடம் தலையிட்டு,சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
சித்தராமையாவுக்கு அப்போது ஏற்பட்ட நெருக்கடி இப்போதும் தொடர்கிறது. 'அவருக்கு வயதாகி விட்டது. போதுமான காலம் முதல்வராக பதவி வகித்து விட்டார். இளைஞர்களுக்கு வழி விடச் சொல்லுங்கள்...' என,சிவகுமார் ஆதரவாளர்கள் அவ்வப்போது போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.
இப்போது மதச்சார்பற்ற ஜனதா தளம், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், சித்தராமையாவுக்குஎதிராக போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
மைசூரு நகர வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில்சித்தராமையா மனைவிக்கு, முறைகேடாக 14 மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி, எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். இதனால், சித்தராமையாவின் பதவி ஆட்டம்கண்டுள்ளது.
'இது, எதிர்க்கட்சியினர் நடத்தும் போராட்டமா அல்லது எங்கள் கட்சிக்குள் உள்ளவர்கள் துாண்டி விட்டு நடக்கும் போராட்டமா என்ற சந்தேகம்உள்ளது...' என, சித்தராமையா தரப்பினர் புலம்புகின்றனர்.