PUBLISHED ON : ஏப் 13, 2024 12:00 AM

'பட்ட காலிலேயே படும் என்பது சரியாகத் தான் இருக்கிறது...' என, கவலையில் ஆழ்ந்துள்ளார், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
இங்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும் தொடர்ந்து முயற்சித்து வந்தன.
இறுதியில், தெலுங்கு தேசத்துக்கு வெற்றி கிடைத்தது. தற்போது தெலுங்கு தேசம், பா.ஜ., மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஜெகன்மோகன் தனியாகவே தேர்தலை சந்திக்கிறார்.
கூட்டணி விஷயத்தில் சொதப்பியதை அடுத்து, ஜெகனுக்கு தொடர்ந்து சறுக்கலாகவே நிகழ்வுகள் நடக்கின்றன.
கிராமப்புறங்களில் உள்ள மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு சேவைகளை வீடு தேடிச் சென்று கொடுப்பதற்காக, மாநிலம் முழுதும், 2.60 லட்சம் தன்னார்வலர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்திருந்தார், ஜெகன்.
தேர்தல் நேரத்தில், இவர்களை வீடு வீடாக அனுப்பி ஆதரவு திரட்டவும் முடிவு செய்திருந்தார். ஆனால், 'இந்த தன்னார்வலர்கள் எந்த ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது' என, தேர்தல் ஆணையம் அதிரடியாக தடை விதித்து விட்டது.
இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெகன், 'சோதனை மேல் சோதனையாக அமைகிறதே...' என, கட்சி நிர்வாகிகளிடம் புலம்பி வருகிறார்.

