நமது நாடு இன்று தனது 77-வது குடியரசு தினத்தை எழுச்சியுடனும், பெருமிதத்துடனும் கொண்டாடியது. டெல்லி முதல் சென்னை வரை, ஒவ்வொரு மாநிலத் தலைநகரங்களிலும் மூவர்ணக் கொடி கம்பீரமாகப் பறக்க, இந்தியாவின் ராணுவ வலிமையும், மண்ணின் மணமும் மாறாத கலாச்சார விழுமியங்களும் கண்கவர் காட்சிகளாக விரிந்தன.
'வந்தே மாதரம்' முழக்கத்தில் விஸ்வரூபம் எடுத்த ராணுவ வலிமைநாட்டின் மையப்பகுதியான டெல்லி கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களான உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றது இந்தியாவின் உலகளாவிய ராஜதந்திர உறவை உறுதிப்படுத்தியது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சூர்யாஸ்த்ரா' ஏவுகணை அமைப்பு மற்றும் போர் முனைகளில் சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன. குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை விளக்கும் முப்படையினரின் கூட்டு அணிவகுப்பு இந்தியாவின் பாதுகாப்பு அரணை உலகிற்கு உணர்த்தியது.
ஒவ்வொரு மாநிலமும் தனது தனித்துவமான கலாச்சாரத்தை அலங்கார ஊர்திகள் மூலம் கண்முன்னே நிறுத்தின'தற்சார்பு இந்தியா' மற்றும் 'தொழில்நுட்ப ஜல்லிக்கட்டு' எனும் கருப்பொருளில், மின்சார வாகன உற்பத்தியில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சியை பறைசாற்றும் ஊர்தி அனைவரையும் கவர்ந்தது.
லோக்மாதா தேவி அகில்யாபாய் ஹோல்கரின் நிர்வாகத் திறனைப் போற்றும் மத்திய பிரதேச மாநில வாகனம்,இந்தியாவின் முதல் 'வாட்டர் மெட்ரோ' மற்றும் முழுமையான டிஜிட்டல் எழுத்தறிவு பெற்ற மாநிலம் என்பதை சொல்லும் கேரளா மாநில வாகனம், குரு தேக் பகதூர் அவர்களின் 350-வது தியாக தினத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்ட வாகனங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன.
பாதுகாப்புப் படையினரின் கம்பீரமான அணிவகுப்புகளுக்கு மத்தியில் சில நெகிழ்ச்சியான காட்சிகளும் அரங்கேறின. போபாலில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி தனது சீருடைப் பணிக்கு மத்தியில் தன் குழந்தையைத் தூக்கி அணைத்து நின்ற காட்சி, 'கடமை ஒருபுறம், அன்பு ஒருபுறம்' என்பதை உலகுக்கு உணர்த்தியது. இதுவே இந்திய ஜனநாயகத்தின் அழகியல்.
விழாவின் உச்சகட்டமாக விமானப்படையின் ரஃபேல் மற்றும் சுகோய் போர் விமானங்கள் வானில் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. மூவர்ணப் புகையை உமிழ்ந்தபடி விமானங்கள் சீறிப்பாய்ந்தது பாரத அன்னையின் வீரத்திற்கு மகுடம் சூட்டுவது போல் இருந்தது.