PUBLISHED ON : ஆக 17, 2024 12:00 AM

'இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர்கள், பெரிய பதவி கிடைத்ததும், செய்யும் செயல்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை...' என, மத்திய பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மோகன் யாதவ் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள்.
இங்கு கடைசியாக நடந்த சட்டசபை தேர்தலில்பா.ஜ., வெற்றி பெற்றதும் சிவ்ராஜ் சிங் சவுகான் தான், மீண்டும் முதல்வராவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில், அதிகம் பிரபலம்இல்லாத மோகன் யாதவுக்குமுதல்வர் பதவி கிடைத்தது. துவக்கத்தில் சற்று அப்பாவியாக காட்டிக்கொண்ட மோகன் யாதவ், இப்போது, தன் அரசியல் விளையாட்டுகளை துவக்கி விட்டார்.
லோக்சபா தேர்தலுக்குமுன், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்த ராம்நிவாஸ் ராவத் என்பவருக்கு வனத்துறை அமைச்சர் பதவியை கொடுத்தார்.
மத்திய பிரதேசத்தில் சில மாவட்டங்களில் இவருக்கு செல்வாக்கு இருப்பதால், அதை தனக்குசாதகமாக பயன்படுத்த, அவருக்கு அமைச்சர்பதவியை மோகன் யாதவ் வழங்கியுள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கை பா.ஜ.,வில் உள்ள எம்.எல்.ஏ.,க்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 'பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறோம். எங்களுக்கு அமைச்சர் பதவி தராமல், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு எப்படி கொடுக்கலாம்...' என, போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
'இந்த சவாலை மோகன் யாதவ் எப்படி சமாளிக்கப்போகிறார் என பார்ப்போம்...' என்கின்றனர், ம.பி., அரசியல்வாதிகள்.

