PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

'ஆந்திராவில் நடக்கும் அரசியல் களேபரங்கள், தெலுங்கு மசாலா சினிமாக்களையே மிஞ்சி விடும் போலிருக்கிறது...' என ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள மக்கள்.
இங்கு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடந்தது. ஒரு காலத்தில் பீஹார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தான், தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி சூறை, முகவர்கள் கடத்தல், துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடக்கும்.
ஆனால், இந்த சம்பவங்கள் எல்லாம் சமீபத்தில் ஆந்திராவிலும் அரங்கேறின. இதையெல்லாம் துாக்கி சாப்பிடும் வகையில், முக்கிய வேட்பாளர்களை, அவர்களது குடும்பத்தினரை விட்டே சரளமாக திட்ட வைத்து, எதிர்க்கட்சிகள் வெளியிட்ட வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆந்திர அமைச்சரான அம்பாதி ராம்பாபுவை,அவரது மருமகன் கடுமையாக விமர்சித்து, 'என் மாமனார் மாதிரி கெட்டவர் உலகத்தில் யாருமே இல்லை. தயவு செய்து அவருக்கு ஓட்டு போடாதீர்கள்...' என, வீடியோ வெளியிட்டார்.
இதுபோல் ஏராளமான வீடியோக்கள் தேர்தல் நாளன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இதைப் பார்த்து ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
'எங்கள் கட்சியின் முக்கிய வேட்பாளர்களின் குடும்பத்தினரை, தெலுங்கு தேசம் கட்சியினர் விலை கொடுத்து வாங்கி, இதுபோன்ற வீடியோக்களை தயாரித்துள்ளனர். தேர்தலை நேரடியாக சந்திக்க முடியாமல், வீடியோவை வைத்து விளையாடுகின்றனர்...' என கொந்தளிக்கிறார், ஜெகன்மோகன் ரெட்டி.

