PUBLISHED ON : மே 11, 2024 12:00 AM

'மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணா நகர் லோக்சபா தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில் வரும், 13ல் தேர்தல் நடக்கவுள்ளது.
ஆளும் கட்சியான திரிணமுல் சார்பில் மஹுவா மொய்த்ரா போட்டியிடுகிறார். இவர், கடந்த தேர்தலிலும் இங்கு போட்டி யிட்டு வெற்றி பெற்றார். பார்லிமென்டில் கேள்வி கேட்பதற்காக,தொழில் அதிபர்களிடம், 'லிப்ஸ்டிக், பேக்' போன்ற பரிசு பொருட்கள் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் இவர், எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனாலும், இந்த முறையும் அவரையே களத்தில் இறக்கியுள்ளார், மம்தா. இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் சமூக ஆர்வலரான அம்ரிதா ராய் போட்டியிடுகிறார். இவரது பிரசாரம் படு தீவிரமாக உள்ளது.
'நான் யாரிடமும் லிப்ஸ்டிக் போன்ற பரிசு பொருட்களை பெற மாட்டேன். தொகுதி மக்கள் பற்றி எந்த கவலையும் இல்லாமல், சுயநலத்துக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதியாக இருக்க மாட்டேன்...' என பெயரை குறிப்பிடாமல், மஹுவா மொய்த்ராவை கடுமையாக விமர்சிக்கிறார், அம்ரிதா.
பதிலுக்கு மஹுவாவும், 'கிருஷ்ணா நகருக்கு திடீர் விருந்தாளியாக வந்தவர்கள், உங்களுக்கு உழைக்க மாட்டார்கள். அவர்களை நம்ப வேண்டாம்...' என, எகிறுகிறார்.
'சபாஷ்... சரியான போட்டி...' என்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.