PUBLISHED ON : ஏப் 10, 2024 12:00 AM

'தேர்தல் நேரத்தில், இதுபோன்ற உணர்ச்சி பெருக்கான காட்சிகள் அரங்கேறுவது சகஜம் தான்...' என்கின்றனர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பா.ஜ.,வினர்.
இங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி., யில் பெரும்பாலான தொகுதிகளை பா.ஜ., வாரி சுருட்டியது.
இதனால், இந்த தேர்தலிலும் உ.பி.,யில் வெற்றியை தக்க வைக்க பா.ஜ., தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர். இதனால், தொகுதி மக்களிடம் அதிருப்தி உள்ள சிட்டிங் எம்.பி.,க்கள் சிலருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுர்யாவின் மகளான சங்கமித்ராவும், சீட் மறுக்கப்பட்ட எம்.பி.,க்களில் முக்கியமானவர். இவர், கடந்த தேர்தலில் படாவுன் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்.
இந்த முறையும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வலம் வந்தார். ஆனால், தொகுதி மக்களிடம் அவருக்கு அதிருப்தி இருப்பது தெரியவந்ததும், அவருக்கு சீட் மறுக்கப்பட்டது.
இதை சங்கமித்ராவால் ஜீரணிக்க முடியவில்லை. சமீபத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த பா.ஜ., ஆலோசனை கூட்டத்தில் தேம்பி தேம்பி அழத் துவங்கி விட்டார், சங்கமித்ரா.
மேடையில் இருந்த தலைவர்களுக்கு தர்மசங்கடமாக போய் விட்டது. அவரை தேற்றுவது பெரும்பாடாகி விட்டது. 'தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருந்தால், இப்போது கண்ணீர் விட வேண்டிய அவசியம் இருந்திருக்காதே...' என, தங்களுக்குள் முணுமுணுத்தனர்.

