PUBLISHED ON : மே 07, 2024 12:00 AM

'பதவி, அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக இந்த அரசியல்வாதிகள் எந்த அளவுக்கும் கீழே இறங்கி வருவர்...' என தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவை பற்றி கூறுகின்றனர், இங்குள்ள மக்கள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தெலுங்கானா தனி மாநிலம் அமைந்ததில் இருந்து, தொடர்ந்து 10 ஆண்டு கள் ஆட்சி செய்த சந்திரசேகர ராவ், ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்.
அதிகாரத்தில் இல்லாததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால், தனக்கு நெருக்கமானவர்களிடம் இது குறித்து புலம்பி வருகிறார். அவர்கள் கூறிய ஆலோசனையின்படி தற்போது செயல்படத் துவங்கியுள்ளார்.
சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது, பொதுமக்களிடம் அதிகம் தொடர்பு வைத்திருக்கவில்லை. பிரசாரத்தை கூட, பொதுக் கூட்டங்கள் வாயிலாகத் தான் நடத்துவார்.
ஆனால், தற்போதைய லோக்சபா தேர்தலில் அவரிடம் மாற்றம் தென்படுகிறது. சாலை வழியாக வாகனத்தில் சென்று பிரசாரம் செய்கிறார். மக்கள் கூடியிருக்கும் இடங்களில் வாகனத்தை நிறுத்தி, அவர்களிடம் பேசுகிறார்.
பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று, 'நான் உங்களுக்கு பேட்டி தருகிறேன்...' என, கோரிக்கை வைக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடந்ததே இல்லை.
சந்திரசேகர ராவின் இந்த மாற்றத்தை பார்த்து, 'ஆடிய ஆட்டம் என்ன...' என கிண்டல் அடிக்கின்றனர், இங்குள்ள மக்கள்.