PUBLISHED ON : மார் 22, 2024 12:00 AM

'இப்போது வசமாக சிக்கி விட்டனர்; இதை வைத்தே நாங்கள் தேர்தலில் அதிரடியாக பிரசாரம் செய்வோம்...' என, திரிணமுல் காங்கிரசை கிண்டலடிக்கின்றனர், மேற்கு வங்கத்தில் உள்ள பா.ஜ.,வினர்.
இங்கு, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த, 10 ஆண்டு களாகவே இங்கு திரிணமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும், ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
'பா.ஜ.,வுக்கும், மேற்கு வங்கத்துக்கும்எந்த தொடர்பும் இல்லை; அது, வேறு மாநிலங்களில் இருந்து வந்த கட்சி. அந்த கட்சிக்கு, இங்கு ஓட்டு இல்லை...' என, மம்தா பானர்ஜி தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன், மேற்கு வங்க மாநில பா.ஜ., மேலிட பொறுப்பாளராக, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கைலாஷ் விஜய்வர்கியா நியமிக்கப்பட்ட போதும், மம்தா பானர்ஜி, இதே விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்த நிலையில் தான், சமீபத்தில் திரிணமுல் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார், மம்தா. இதில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கீர்த்தி ஆசாத், யூசுப் பதான், பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.
இவர்களில் சத்ருகன் சின்ஹாவும், கீர்த்தி ஆசாத்தும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். யூசுப் பதான், குஜராத்தைச் சேர்ந்தவர். இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள பா.ஜ.,வினர், 'மம்தாவின் மண்ணின் மைந்தர்கள் கோஷம், இப்போது எங்கு போனது...' என, கேள்வி எழுப்புகின்றனர்.

