PUBLISHED ON : மே 20, 2024 12:00 AM

'கொஞ்சம் யோசித்து செயல்பட்டிருந்தால் இவ்வளவு அவமானப்பட்டிருக்க வேண்டியிருந்திருக்காது...' என, தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டியை பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.
தெலுங்கானாவில் சமீபத்தில் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இதில், முக்கிய கட்சியினர் எல்லாம், வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து, வாக்காளர்களை கவர முயன்றனர்.
இந்த விஷயத்தில் ரேவந்த் ரெட்டி, கொஞ்சம் ஓவராகவே போய் விட்டார். 'தெலுங்கானா மாநிலத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை மக்களிடம் வித்தியாசமாக எடுத்துக் கூற வேண்டும்' என நினைத்தார்.
இதையடுத்து, பொதுக்கூட்டங்களில் கழுதை படம் வரைந்து, அது, முட்டையிடுவது போன்ற, 'கட் - அவுட்'டை தயார் செய்து, அதை கையில் துாக்கி காண்பித்தபடி பிரசாரம் செய்தார்.
'மோடி ஆட்சியில் தெலுங்கானாவுக்கு கிடைத்தது கழுதை முட்டை தான். இதைத் தவிர வேறு எதையுமே மத்திய அரசு செய்யவில்லை...' என, முழங்கினார்.
அதற்கு பின் தான், இந்த விஷயத்தில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. 'கழுதை எப்போதுமே முட்டையிடுவது இல்லை. மாடு போல குட்டி தான் போடும். இது தெரியாமல், ரேவந்த் ரெட்டி கழுதை முட்டை படத்தை வரைந்து பிரசாரம் செய்கிறாரே' என, பலரும் கிண்டலடித்தனர்.
'ஒரு முதல்வராக இருப்பவருக்கு இந்த விஷயம் கூட தெரியாதா; யார் கொடுத்த, 'ஐடியா' இது...' என, ரேவந்த் ரெட்டியை காய்ச்சி எடுக்கின்றனர், கட்சியினர்.

