PUBLISHED ON : டிச 03, 2025 04:16 PM

இன்றைய ரஷ்யாவானது முன்னாள் சோவியத் யூனியனாகும்.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்ததுதான் உக்ரைன்.
பிரிந்து போனதற்கு காரணம் ரஷ்யாவின் இரும்புக்கதவு கலாச்சாரம் பிடிக்காமல் போனதும்,மேற்கத்திய கலாச்சாரங்கள் பிடித்தும் போனதும்தான்.
இந்த நேட்டோ கூட்டமைப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்டது குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரானது.
இதில் உக்ரைன் சேர்ந்தால் அது நேட்டோ ராணுவ உதவியுடன் அதன் தளவாடங்களைக் கொண்டு வந்து ரஷ்யாவின் எல்லை அருகே நிறுத்தம், இது ரஷ்யாவிற்கு தீராத தலைவலியைத்தரும்.
மேலும் உக்ரைன் பிரிந்தாலும் அதை தனி நாடு என்பதை ரஷ்யா ஏற்க மறுக்கிறது.உக்ரைன் என்பது ரஷ்யாவின் ஒரு பகுதியாக அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும் என்று விரும்புகிறது அந்த எரிசலுடன் இந்த நேட்டோ கூட்டமைப்பு எரிச்சலும் சேர்ந்து கொள்ள உக்ரைனை உக்ரத்துடன் ரஷ்யா பார்த்தது. கிராமிய என்ற உக்ரைன் பகுதியை ரஷ்யா தனது ராணுவ வலிமையால் அபகரித்தது.
ரஷ்யாவைப் பொறுத்தவரை உக்ரைன் சிறிய நாடுதான் ஆனால் அதற்கு அமெரிக்காவின் நிதி மற்றும் ராணவ உதவி இருப்பதால் ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் ஆற்றலையும் துணிச்சலையும் தந்துள்ளது.
உக்ரைனுக்கு கொடுக்கும் அடி அமெரிக்காவிற்கு கொடுக்கும் அடியாக இருக்கவேண்டும் என்ற நோக்கோடு ரஷ்யா, உக்ரைன் மீது உத்வேகத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக போரிடுகிறது.
குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற போர் தர்மத்தை மீறி ரஷ்யா,உக்ரைன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திவருகிறது.
இந்த தாக்குதலில் உக்ரைன் பக்கம் இருந்து 10 ஆயிரம் பொதுமக்கள் உயரிழந்துள்ளனர்,18 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்,லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
ஒவ்வொரு குண்டு வெடிப்பும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையே தகர்க்கிறது என்பதுதான் நிதர்சனம்.
நேற்றைய தாக்குலில் காயமான இளைஞர் கோஸ்ட்யன்டின் கதை இது.
இவர் வாழ்ந்து வந்த குடியிருப்பு பகுதியில் வெடித்த குண்டின் சிதறல் அவரது முகத்தில் பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது. முகம் முழுவதும் ரத்தம் வடிந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது கீவிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முக காயங்கள் ஆழமானவை. முகச் சதை மற்றும் நரம்புகளுக்கு ஏற்பட்ட சேதத்தால், நீண்ட கால சிகிச்சை அவசியம் ஆழமான புண்களும், ரத்தக் கட்டிகளும் தென்படுவதால் நிரந்தர மாறுபாடுகள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
உக்ரைனில் உள்ள மருத்துவமனைகளில் கோஸ்ட்யன்டின் போன்ற இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.அவர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் போரின் முத்திரை அழுத்தமாக பதிந்துள்ளது
ஒவ்வொருவரின் கண்களில் மிஞ்சியிருப்பது பயமும் அதிர்ச்சியும் மட்டுமே
அவர்கள் மனதில் ஒரே ஒரு கேள்விதான்
இந்த போர் எப்போது முடியும்?
-எல்.முருகராஜ்.

