தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அ.தி.மு.க., ஆட்சி அமைய விரும்பும் தி.மு.க.,வினர்!

 அ.தி.மு.க., ஆட்சி அமைய விரும்பும் தி.மு.க.,வினர்!

 அ.தி.மு.க., ஆட்சி அமைய விரும்பும் தி.மு.க.,வினர்!


PUBLISHED ON : ஜன 27, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 27, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏ லக்காய் டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''டுபாக்கூர்கள் தொல்லை அதிகமாயிடுச்சு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''கோவையில், போலி நிருபர்கள் எண்ணிக்கை ஜாஸ்தியாயிட்டு... வாரா வாரம் திங்கள் கிழமை, கலெக்டர் ஆபீஸ்ல, மக்கள் குறைதீர் கூட்டம் நடக்குமே... இதுல, பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வந்து, மனுக்கள் குடுப்பாங்க பா...

''அவங்களை பார்க்கிற போலி நிருபர்கள், 'உங்க கோரிக்கை சம்பந்தமா செய்திகள் வெளியிடுறோம்'னு சொல்லி பணம் பறிக்கிறாங்க... இது, கலெக்டர் காதுக்கும் போக, பி.ஆர்.ஓ.,வை கூப்பிட்டு, இது சம்பந்தமா விசாரிக்க சொல்லியிருக்காரு... 'இந்த மாதிரி டுபாக்கூர்களை கலெக்டர் ஆபீஸ் வளாகத்துக்குள்ளயே விடக்கூடாது'ன்னு நிஜமான பத்திரிகையாளர்கள் எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''மறுபடியும், 'சீட்' கிடைக்குமான்னு தெரியல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''கடவுள் ராமருடன் தொடர்புடைய ராமநாதபுரம், பிரதமர் மோடிக்கு ரொம்பவே பிடிச்ச ஊராம்... அதோட, 'ராமநாதபுரம் சட்டசபை தொகுதியை பிடிச்சுட்டா, கோட்டையில ஆட்சிக்கு வந்துடலாம்'னு அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தலைமைக்கு சில ஜோதிடர்கள் ஆலோசனை குடுத்திருக்கா ஓய்...

''இதனால, இந்த தொகுதியில் நடந்த வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகளை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கண்கொத்தி பாம்பா கவனிச்சு, நிறைய போலி வாக்காளர்களை நீக்கிட்டார்... இதனால, 'தி.மு.க.,வினர் கள்ள ஓட்டு போட்டு இங்க ஜெயிக்க முடியாது'ன்னு அ.தி.மு.க.,வினர் சொல்றா ஓய்...

''அதுவும் இல்லாம, 'அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டிகளுக்கும், 100 சதவீதம் திறமையான நிர்வாகிகளை நியமிச்சிருக்கா... இதனால, இந்த தொகுதியில், தி.மு.க.,வுக்கு பின்னடைவு ஏற்படும்'னு ஆளுங்கட்சி மேலிடத்துக்கு உளவுத்துறையும் அறிக்கை குடுத்திருக்கு... இதனால, இந்த தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., முத்துராமலிங்கத்துக்கு மறுபடியும் சீட் கிடைக்கறது சந்தேகம் தான் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அடுத்து, அ.தி.மு.க., ஆட்சி தான்னு சொல்லிட்டு வந்திருக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''நீலகிரி மாவட்டம், ஊட்டி மார்க்கெட்டுல, 1,300 கடைகள் இருந்துச்சு... இந்த கடைகளை நம்பி, 20,000 குடும்பங்கள் இருக்கு... ஊட்டி நகராட்சி சார்பில், இந்த மார்க்கெட்டை இடிச்சிட்டு, புது கடைகளை கட்டும் திட்டத்தை கொண்டு வந்தாவ வே...

''ஆனா, ரெண்டு வருஷமாகியும், புது கடைகளை கட்டி தராம இழுத்தடிக்கிறதால, வியாபாரிகள் பிளாட்பாரத்துல உட்கார்ந்திருக்காவ... புது மார்க்கெட் கட்டுறதுலயும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்திருக்கு வே...

''இதனால, 'நகராட்சியின் முக்கிய பதவிகள்ல இருக்கிறவங்க தான் இதுக்கெல்லாம் காரணம்'னு வியாபாரிகள் புலம்புதா வே... இந்த சூழல்ல, நகராட்சியில் தி.மு.க., முக்கிய புள்ளியின் சொந்த தம்பி உள்ளிட்ட சிலர், சமீபத்துல அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை பார்த்து பேசியிருக்காவ வே...

''அப்ப, 'அடுத்து அ.தி.மு.க., ஆட்சி தான் அமையும்... நீங்க முதல்வரானதும், ஊட்டி மார்க்கெட் பிரச்னைகளை சரி பண்ணி தரணும்'னு சொல்லிட்டு வந்திருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''ரவிகுமாரும், அவரோட தம்பி குலசேகரணும் வரா... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us