PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

'உட்கட்சி பஞ்சாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், எப்படி பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் நடத்துவது...' என புலம்புகிறார், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அந்த கட்சியின் எம்.பி.,யுமான ராகுல்.
காங்கிரஸ் என்றாலேகோஷ்டி பூசல் என்பதுஎல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்போது, காங்கிரசில் கோஷ்டி பூசலை கடந்து, வேறு ஒரு பிரச்னை பூதாகரமாக முளைத்துள்ளது.
கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், சர்ச்சைக்குரிய வகையில் பேசி, நாடு முழுதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, கட்சியின் நற்பெயரை கெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
காங்கிரசின் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ராடோ, இதில் முதல் இடத்தில் உள்ளார். அவரால் ஏற்பட்ட பிரச்னையில் இருந்து மீள்வதற்குள், இப்போது கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான ஷாமா முகமது, அடுத்த பிரச்னைக்கு வித்திட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் உடல் எடையை சுட்டிக்காட்டி, அவர் கூறிய கருத்துகளுக்கு, அரசியலை கடந்து நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
'நம் நாட்டில் கிரிக்கெட்டும், தேசப்பற்றும் ஒன்றோடு ஒன்று கலந்தவை. ஷாமா முகமது தேவையில்லாமல் ரோஹித் சர்மா பற்றி கருத்து தெரிவித்து, கட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி விட்டார். இது, அடுத்து நடக்க உள்ள பீஹார் சட்டசபை தேர்தலில் எதிரொலித்தால் என்ன செய்வது...?' என, கலக்கத்தில் உள்ளார் ராகுல்.