PUBLISHED ON : பிப் 02, 2025 12:00 AM

'இந்த வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கிறாரே...' என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள அதிகாரிகள்.
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், சமீபத்தில் உலக பொருளாதார மாநாடு நடந்தது. இதில், நம் நாட்டில் இருந்து பல மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆந்திரா சார்பில், முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிகாரிகளுடன் சென்றார். சுவிட்சர்லாந்து குளிர் பிரதேசம்; உடலை உறைய வைக்கும் அளவுக்கு, பனிப்பொழிவு நிலவும். கடும் குளிரை தாங்கும் அளவுக்கு உடையணிந்து சென்றால் தான், அங்கு நடமாடவே முடியும்.
இதனால், ஆந்திரா வில் இருந்து சென்ற அதிகாரிகள், ஸ்வெட்டர் உள்ளிட்ட குளிரை தாங்கக் கூடிய உடைகள் அணிந்து சென்றனர்; ஆனால், சந்திரபாபு நாயுடுவோ, வழக்கமான கதர் சட்டை, கதர் பேன்ட் அணிந்து சென்றார்.
ஆனாலும், சுவிட்சர்லாந்தின் குளிரும், பனியும், அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆந்திராவில் இருக்கும் போது எப்படியிருப்பாரோ, அப்படித் தான் சுவிட்சர்லாந்திலும் நடமாடினார்.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஆந்திர அதிகாரிகள், 'சந்திரபாபு நாயுடுவுக்கு, 74 வயதாகிறது. ஆனால், இந்த கடும் குளிரை மிகவும் எளிதாக சமாளித்து விட்டாரே... அவருக்கு வைரம் பாய்ந்த உடம்பு தான்...' என, வியந்து பேசுகின்றனர்.