/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வாழ்க்கை என்பது போராட்டமில்லை கொண்டாட்டம்!
/
வாழ்க்கை என்பது போராட்டமில்லை கொண்டாட்டம்!
PUBLISHED ON : டிச 16, 2025 02:51 AM

சமையல் துறையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ள, சென்னையைச் சேர்ந்த சமையல் நிபுணர், 'மெனு ராணி' செல்லம்:
எனக்கு இப்போது, 80 வயது. 77 வயது வரை, எந்த கவலைகளும் இல்லாமல், வாழ்க்கையை அனுபவித்துள்ளேன். இப்போது விடியும் ஒவ்வொரு பொழுதையும், கடவுள் எனக்கு கொடுத்த போனசாக நினைத்து சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.
கடந்த 2020ல், உலகத்தையே ஆட்டிப் படைத்த கொரோனா உச்சத்தில் இருந்த நேரம். கணவர் இறந்த நிலையில், இந்தியாவில் தனியாக இருக்க விரும்பாமல், அமெரிக்காவில் வசிக்கும் என் மகள்கள் வீட்டுக்கு சென்றேன்.
வாயில் புண் வர, வழக்கமாக வரும் வாய்ப்புண் தான் என, கைவைத்தியம் செய்து பார்த்தேன்; சரியாகவில்லை. பரிசோதனையில் வாய் புற்றுநோய் என தெரிய வந்தது. 'பயப்பட வேண்டாம்; கழுத்தை கீறி, கட்டியை அகற்றணும்' என்றார், மருத்துவர். கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.
அதன்பின், ஆறு மாதங்கள் கழித்து இந்தியா திரும்பினேன். வழக்கம் போல் சமையல் வகுப்பு, டிசம்பர் கச்சேரி சீசன், சமூக வலைதள பதிவுகள் என, மறுபடியும் பரபரப்பாக வேலை பார்க்க ஆரம்பித்தேன்.
அந்தாண்டு மழை வெள்ளத்தால் வீட்டுக்குள் தண்ணீர் வரவே, அந்த வீட்டை விற்று, புது அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினேன். புதிய வீட்டின் பணிகள் தாமதமாக, மறுபடி மகள்களை பார்க்க அமெரிக்கா சென்றேன்.
சில நாட்களிலேயே மறுபடி சோதனை. வாயில் சுண்டைக்காய் அளவில் கட்டி வந்து, கடைசியில் எலுமிச்சை அளவு பெரிதானது. மருத்துவரை பார்த்த போது, 'இது விவரிக்க முடியாத புற்று நோய். இந்த முறை அறுவை சிகிச்சை கொஞ்சம் சிக்கலாக இருக்கும்' என்றார். கிட்டத்தட்ட எட்டரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகான நாட்கள், நரக வேதனையாக இருந்தன.
சமையல் போட்டியில், 50 இனிப்புகள், 50 காரங்கள் என, ஒரு நாளுக்கு, 100 அயிட்டங்களை சுவைத்து மதிப்பிட்டுள்ளேன். அப்போதெல்லாம் ஒருநாளும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வந்து விடுமோ என கவலைப்பட்டதில்லை. அப்படியிருந்த எனக்கு, திடீரென ஒருநாள், ஒரு டீஸ்பூன் தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை; இந்த நிலையும் மாறும் என நம்பினேன்.
தற்போது இந்தியா திரும்பி, இந்த வயதிலும் எனக்கான உணவை நானே சமைத்துக் கொள்கிறேன்; சமையல் வகுப்பு எடுக்கிறேன்; ஓவியங்கள் வரைகிறேன்; காய்கறிகளை செதுக்கும் கலையையும் செய்து வருகிறேன். என் வீட்டை, நானே அலங்காரம் செய்கிறேன்.
வாழும் ஒவ்வொரு நாளும், கடவுள் நமக்கு கொடுத்த ஆசிர்வாதம். 'நாளை என்னவாகும்' என, இன்றே கவலைப்பட வேண்டாம். இந்த தருணத்தை சந்தோஷமாக, அடுத்தவர்களுக்கு உபயோகமானதாக வாழலாம். ஏனெனில், வாழ்க்கை என்பது போராட்டமில்லை; கொண்டாட்டம்.

