PUBLISHED ON : நவ 05, 2024 12:00 AM

'எங்கள் கட்சியில் ஒவ்வொரு காலத்திலும், குறிப்பிட்ட தலைவரின் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். இப்போது, இவரது கொடி பறக்கிறது...' என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறித்து வயிற்றெரிச்சலுடன் பேசுகின்றனர், சக அமைச்சர்கள்.
இவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். தற்போது ரயில்வே மட்டுமல்லாது, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுக்கும் அமைச்சராக உள்ளார். நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர் என்பதால், இவரிடம் இந்த முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார், பிரதமர் மோடி.
இதற்கு முன், பா.ஜ., தலைமையிலான மத்தியஅமைச்சரவை கூட்டத்தில்எடுக்கப்படும் முடிவுகளைசெய்தியாளர்களுக்கு சொல்லும் பணி, ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, பியுஷ் கோயல் ஆகியோருக்கு தரப்பட்டுஇருந்தது.
சமீப காலமாக இந்த பணியைச் செய்பவர் அஸ்வினி வைஷ்ணவ். மற்றவர்களை போல, 'மைக்' முன் அமர்ந்து செய்தியாளர்களுக்கு இவர் விளக்கம் சொல்வது இல்லை.
மிகப்பெரிய டிஜிட்டல் திரையில் அமைச்சரவையின்முக்கிய முடிவுகள் குறித்த விபரங்கள் ஒளிரும். அவற்றை சுட்டிக்காட்டி, வகுப்பறையில் ஆசிரியர்கள்பாடம் நடத்துவதுபோல், நின்றபடியே செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து அசத்துகிறார், வைஷ்ணவ்.
'இன்னும் சில மாதங்களில் மத்திய அமைச்சரவையில் இவருக்கு மேலும் முக்கியத்துவம்கிடைக்கும் போலிருக்கிறது. இவருக்கு ஒளிமயமானஎதிர்காலம் காத்திருக்கிறது...' என, சக அமைச்சர்கள் பெருமூச்சு விடுகின்றனர்.