PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

'ஆரம்பத்தில் நன்றாகத் தான் இருக்கிறது; போக போக ஆட்டம் காண துவங்கி விடுகிறது...' என, பீஹாரில், 'இண்டி' கூட்டணி நிலைமை குறித்து கிண்டல் அடிக்கின்றனர், பா.ஜ.,வினர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
ஆளும் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியை எதிர்த்து, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய, 'இண்டி' கூட்டணி களம் காண்கிறது.
'இண்டி' கூட்டணி சார்பில் காங்கிரசின் ராகுலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவும் சமீபத்தில் பிரமாண்ட யாத்திரையை நடத்தினர். இதில், தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தான் என்பதை, ராகுல் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
தொகுதி பங்கீட்டிலும், இரு கட்சிகளுக்கும் இடையே சிக்கல் நீடித்து வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், 70 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கும்படி காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
தேஜஸ்வி யாதவோ, 'அவ்வளவு தொகுதிகளை ஒதுக்க முடியாது...' என பிடிவாதமாக இருக்கிறார். பீஹாரில் தனக்குள்ள செல்வாக்கை காட்டுவதற்காக, தனியாக மிக பிரமாண்டமான யாத்திரையை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இதை கேள்விப்பட்ட பா.ஜ.,வினர், 'தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, 'இண்டி' கூட்டணி வண்டி குடை சாய்ந்து விடும் போலிருக்கிறதே...' என, கிண்டல் அடிக்கின்றனர்.