/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கட்சி பிரமுகரிடமே , ' கட்டிங் ' வாங்கிய தி.மு.க. , புள்ளி!
/
கட்சி பிரமுகரிடமே , ' கட்டிங் ' வாங்கிய தி.மு.க. , புள்ளி!
கட்சி பிரமுகரிடமே , ' கட்டிங் ' வாங்கிய தி.மு.க. , புள்ளி!
கட்சி பிரமுகரிடமே , ' கட்டிங் ' வாங்கிய தி.மு.க. , புள்ளி!
PUBLISHED ON : டிச 22, 2025 03:10 AM

இ ஞ்சி டீயை ருசித்தபடியே, ''நோயாளிகளும், பொதுமக்களும் சிரமப்படுறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான உள் நோயாளிகளும், வெளிநோயாளிகளும், அவங்களை பார்க்க உறவினர்களும் வந்து, போறாங்க... ஆனா, இந்த மருத்துவமனை வளாகங்கள்ல, அவசரத்துக்கு பணம் எடுக்க, ஏ.டி.எம்., இயந் திரங்கள் இல்லைங்க...
''பொதுமக்கள் வெளியில போய் அலையா அலைய வேண்டியிருக்கு... இதனால, இந்த மருத்துவமனை வளாகங்களுக்குள்ள, ஏ.டி.எம்., இயந்திரங்கள் வைக்க, மருத்துவமனை நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்தா நல்லாயிருக்குமுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''லஞ்ச பட்டியலை வாசித்து, வம்புல மாட்டிண்டார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகத்தில், ஒப்பந்ததாரரா பதிவு பண்ண, அங்கிருந்த அதிகாரியை ஒருத்தர் பார்த்திருக்கார்... 3,000 ரூபாய் கட்டணமும், சில ஆவணங்களையும் குடுத்தா, ஒப்பந்ததாரருக்கான பதிவு சான்றிதழ் தந்துடுவா ஓய்...
''ஆனா, '50,000 ரூபாய் கொடுத்தால் தான், பதிவு பண்ண முடியும்'னு அதிகாரி கறாரா சொல்லிட்டார்... அதுவும் இல்லாம, 'இந்த பணம், எனக்கு மட்டுமில்ல... எனக்கு, 20,000 போக, மத்தவாளுக்கும் பிரிச்சு குடுக்கணும்'னு பட்டியலும் போட்டிருக்கார் ஓய்...
''அதிகாரி கேட்ட பணத்தை குடுத்த பிறகும், சான்றிதழ் தரல... அதிகாரியிடம் போய் கேட்டப்ப, 'இன்னும், 5,000 ரூபாய் தாங்க'ன்னு அடம் பிடிச்சிருக்கார் ஓய்...
''இந்த முறை, அதிகாரி பேசியதை ஒப்பந்ததாரர், தன் மொபைல்போன்ல ரகசிய வீடியோவா பதிவு பண்ணி, உயர் அதிகாரி களுக்கு அனுப்பிட்டார்... இப்ப, அந்த அதிகாரி கலக்கத்துல இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ரஞ்சித், இதையும் கேட்டுட்டு கிளம்பும்...'' என, நண்பரை நிறுத்திய பெரியசாமி அண்ணாச்சியே, ''சொந்த கட்சி பிரமுகரிடமே வசூல் பண்ணிட்டாருல்லா...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிற ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், இரவு காவலர், அலுவலக உதவியாளர், கார் ஓட்டுநர் வேலைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு, ஆட்கள் எடுத்துச்சு... இதுல, அலுவலக உதவியாளர் பணிக்கு, ஆளுங்கட்சி ஒன்றிய பிரமுகர் ஒருத்தர், தன் மகனுக்கு விண்ணப்பிச்சிருக்காரு வே...
''மாவட்ட, தி.மு.க., புள்ளியிடம் போய், சிபாரிசு பண்ணுங்கன்னு கேட்டிருக்காரு... அவரோ, 'யாரா இருந்தாலும் துறையின் அமைச்சர் மற்றும் மாவட்ட அமைச்சருக்கு பணம் கொடுத்தா தான் காரியம் நடக்கும்' என சொல்லி, 10 லட்சம் ரூபாயை கறாரா வசூல் பண்ணிட்டாரு வே...
''சில நாட்களுக்கு பிறகு, ஒன்றிய பிரமுகரை கூப்பிட்ட மாவட்ட புள்ளி, 'நீங்க தந்த, 10 லட்சத்தில எல்லாருக்கும் பங்கு போக, உங்க பங்கான, 1.50 லட்சம் ரூபாய்'னு சொல்லி திருப்பி குடுத்திருக்காரு...
''ஒன்றிய பிரமுகரோ, 'எம்.எல்.ஏ.,வா அவரை ஜெயிக்க, தேர்தல்ல ராப்பகலா உழைச்சேன்... அப்படியிருந்தும், என் கிட்டயே, 8.50 லட்சம் ரூபாயை கறந்துட்டாரே'ன்னு புலம்பிட்டு இருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அன்வர் பாய், ''என்ன சந்திரன்... நம்ம சண்முகம்கிட்டயே உங்க வேலையை காட்டிட்டீங்களாமே பா...'' என, பேசிய படியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

