/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காங்., தொகுதி மீது 'கண்' வைத்துள்ள ஆளுங்கட்சி பிரமுகர்!
/
காங்., தொகுதி மீது 'கண்' வைத்துள்ள ஆளுங்கட்சி பிரமுகர்!
காங்., தொகுதி மீது 'கண்' வைத்துள்ள ஆளுங்கட்சி பிரமுகர்!
காங்., தொகுதி மீது 'கண்' வைத்துள்ள ஆளுங்கட்சி பிரமுகர்!
PUBLISHED ON : டிச 21, 2025 02:23 AM

''குறைச்சு குடுக்கற சம்பளத்தையும் ஒழுங்கா தர மாட்டேங்கறா ஓய்...'' என்றபடியே, பில்டர் காபிக்கு, 'ஆர்டர்' தந்தார் குப்பண்ணா.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னை அண்ணா சாலையில், தமிழக மின் வாரியத்தின் தலைமை அலுவலகம் இருக்கோல்லியோ... இங்க, ஒப்பந்த அடிப்படையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள், 'டைப்பிஸ்ட்'டா வேலை பார்க்கறா ஓய்...
''இவாளுக்கு மாசத்துக்கு, 20,000 ரூபாய் சம்பளம்... அதையும் முழுசா தராம, 7,000 ரூபாயை பிடிச்சுண்டு, 13,000 தான் தரா... அதையும் மாச துவக்கத்துல தராம, 10ம் தேதி வரைக்கும் இழுத்தடிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பட்டா மாறுதல்ல புகுந்து விளையாடுறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''-கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா அதிகாரிகள், பட்டா மாறுதல்ல, 'கட்டிங்' வசூல் பண்ணி கொழிக்கிறாங்க... உதாரணத்துக்கு, சேராக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாலகுரு என்பவரது பூர்வீக சொத்து தொடர்பா, அவரது வாரிசுகள் ராஜகுமாரி, மணிகண்டன் தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்ல நிலுவையில இருக்கு பா...
''ஆனா, பிரச்னைக்குரிய அந்த இடத்துக்கு போலி ஆவணங்கள் தயாரிச்சு, ரெண்டு, மூணு பேர் பெயர்ல, சிலர் பத்திரம் பதிவு பண்ணிட்டாங்க... இந்த நிலத்துக்கு வருவாய் துறையின் ரெண்டு அதிகாரிகள் உட்பட நாலு பேர், லட்சக்கணக்குல பணம் வாங்கிட்டு, பட்டா பெயர் மாற்றமும் பண்ணி குடுத்துட்டாங்க பா...
''இந்த பட்டாவை ரத்து பண்ண கோரி, இடத்தின் உரிமையாளர் ராஜகுமாரி தரப்புல, வருவாய் துறை உயர் அதிகாரிகளிடம் மனு மேல மனுக்கள் குடுத்தும், எதுவும் நடக்கல பா...'' என்றார், அன்வர்பாய்.
''சந்திரசேகரன், சிவசக்திவேல், இளஞ்செழியன், ஜெகன்மூர்த்தி எல்லாரும் சேர்ந்து வர்றாங்களே... மெது வடை குடுங்க நாயரே...'' என்ற அந்தோணிசாமியே, ''ஊட்டி தொகுதிக்கு குறி வச்சிருக்காருங்க...'' என்றார்.
''யார் ஓய் அது...'' என கேட்டார், குப்பண்ணா.
''நீலகிரி மாவட்டம், ஊட்டி தொகுதி இப்ப, காங்., வசம் இருக்கு... 'வர்ற தேர்தல்ல, இங்க தி.மு.க.,வே போட்டியிடணும்'னு இந்த மாவட்ட நிர்வாகிகள், தலைமைக்கு கோரிக்கை வச்சிருக்காங்க...
''ஊட்டி நகராட்சியில் முக்கிய பதவியில் இருக்கிற, மாவட்ட தி.மு.க., நிர்வாகி, தொகுதிக்கு இப்பவே, 'துண்டு' போடுறாரு... ஏற்கனவே, நகராட்சி நிர்வாகத்துல இவர் ஏகப்பட்ட முறைகேடுகள் பண்றதா நிறைய புகார்கள் இருக்குதுங்க...
''அவருக்கு சொந்தமான ஹோட்டல் இருக்கிற பகுதிக்கு, அரசின், 'நமக்கு நாமே' திட்ட நிதியில், சாலை போட்டிருக்கார்... 1,300 கடைகள் அடங்கிய, ஊட்டி பழைய மார்க்கெட்டை இடிச்சிட்டு, புது மார்க்கெட் கட்டுற திட்டத்துலயும் ஏகப்பட்ட ஊழல் பண்ணிட்டதா, வியாபாரிகள் எல்லாம் அவருக்கு எதிரா போர்க்கொடி துாக்கியிருக்காங்க...
''இதெல்லாம், கட்சி மேலிடத்துக்கும் போயிருக்கு... இதனால, தன்னோட எம்.எல்.ஏ., கனவுக்கு வேட்டு வந்துடுமோன்னு பயந்து, சென்னையில முகாமிட்டு, ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகளை பார்த்து, ஊட்டி வேட்பாளர் ஆக காய் நகர்த்திட்டு இருக்காருங்க...
''ஆனா, 'இவருக்கு சீட் குடுத்தா, ஊட்டியில் வெற்றி கேள்விக்குறிதான்'னு ஆளுங்கட்சி மேலிடத்துக்கு உளவுத்துறை தகவல் அனுப்பியிருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''ரவிகுமார், இங்கன உட்காரும்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

