PUBLISHED ON : செப் 30, 2024 12:00 AM

லோக்சபா தேர்தலில் இழந்த செல்வாக்கை இந்த முறை எப்படியும் மீட்டு விட வேண்டும் என, தீவிரமாக களம் இறங்கியுள்ளார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்.
உ.பி.,யில் மொத்தம், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் இவற்றில், 33 தொகுதிகளில் மட்டுமே, பா.ஜ., வெற்றி பெற்றது. அதற்கு முந்தைய தேர்தலில், 62 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
'உ.பி.,யில் ஆளுங்கட்சியாக இருந்தும், பா.ஜ., இப்படி தோற்று விட்டதே...' என, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. உ.பி., மாநில பா.ஜ., வில் உள்ள மூத்த தலைவர்கள் கூட, தோல்விக்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கைகாட்டினர்.
இந்த நிலையில் தான், இங்கு விரைவில், 10 சட்ட சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது; தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன், இடைத்தேர்தல்களில் வெற்றியை குவிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள யோகி ஆதித்யநாத்தும், 10க்கும் மேற்பட்ட அமைச்சர்களை தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு அனுப்பி வைத்து, மக்களை சந்தித்து குறைகளை கேட்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.
'இடைத்தேர்தலிலும் தோல்வி அடைந்தால், ஆதித்யநாத்தின் முதல்வர் பதவி கேள்விக்குறியாகி விடும். தலைக்கு மேல் கத்தி தொங்குவதால் முழு வீச்சில் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்...' என்கின்றனர், உ.பி., அரசியல்வாதிகள்.

