PUBLISHED ON : ஜூலை 08, 2025 12:00 AM

'கொஞ்சம் ஏமாந்தால் தலையில் மிளகாய் அரைத்து விடுவர் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக உள்ள அகிலேஷ் யாதவ், மீண்டும் ஆட்சியை பிடிக்க முயற்சித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், 'விரைவில் என் பிறந்த நாள் வருகிறது. இதற்காக எனக்கு யாரும் பரிசு பொருட்களோ, சால்வையோ, பூங்கொத்துகளோ எடுத்து வர வேண்டாம்.
'அதற்கு பதிலாக, என் தந்தையும், முன்னாள் முதல்வருமான, மறைந்த முலாயம் சிங் யாதவின் நினைவிடத்தை பிரமாண்டமாக கட்ட, தாராளமாக நன்கொடை அளியுங்கள்...' என, அறிவித்தார்.
இந்த செய்தி வெளியான அடுத்த சில நிமிடங்களில், 'முலாயம் சிங் நினைவிடம் அமைக்க நன்கொடை அளிக்க வேண்டிய வங்கி கணக்கு எண்' என கூறி, சமூக வலைதளங்களில் ஒரு அறிவிப்பு வெளியானது.
கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும், அந்த வங்கி கணக்கில் பணம் செலுத்தினர். ஆனால் அது, மோசடி வங்கி கணக்கு என்பதும், அதற்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்தது.
அதற்குள், அந்த வங்கி கணக்கில், லட்சக்கணக்கான ரூபாயை பலரும் செலுத்தி விட்டனர். இதையறிந்த அகிலேஷ் யாதவ், 'எப்படியெல்லாம் ஏமாற்றி மோசடி செய்கின்றனர்; ரொம்ப மோசமான உலகமாக இருக்கிறதே...' என, சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.