PUBLISHED ON : பிப் 16, 2024 12:00 AM

'ஒரு ஆர்வத்தில் பாட்டு பாடினால், முத்திரை குத்தி அரசியலில் இருந்தே ஓரம் கட்டி விடுவர் போலிருக்கிறதே...' என்கிறார், மத்திய பிரதேச மாநில பா.ஜ., மூத்த தலைவரான கைலாஷ் விஜய் வர்கியா.
இங்கு, முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ம.பி.,யில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், முதல்வர் பதவிக்கான கனவுடன் இருந்தவர்களில் விஜய் வர்கியாவும் ஒருவர்.
பா.ஜ., தேசிய பொதுச் செயலர்களில் ஒருவராக இருந்த இவர், 'இந்த முறை நான் தான் முதல்வர்...' என, தன் ஆதரவாளர்களிடம் கூறி வந்தார்.
ஆனால், புதுமுகமான மோகன் யாதவுக்கு முதல்வர் பதவியை கொடுத்த பா.ஜ., மேலிடம், விஜய் வர்கியாவுக்கு அமைச்சர் பதவியை கொடுத்தது.
இதனால் ஏற்பட்ட அதிருப்தியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கட்சி பணியில் ஈடுபட்டுள்ளார், விஜய் வர்கியா.
சமீபத்தில் இந்துாரில் நடந்த ஒரு பா.ஜ., நிகழ்ச்சியில், கடவுள் ராமர் பற்றிய பஜனை பாடலை தாள நயத்துடன் மேடையில் பாடி அசத்தினார், விஜய் வர்கியா; கூட்டத்தில் இருந்தவர்களும், அவருடன் சேர்ந்து பாட, கச்சேரி களை கட்டியது,
நிகழ்ச்சி முடிந்ததும், பலரும் அவரிடம் வந்து, 'தலைவரே, ஒரிஜினல் பஜனை பாடகர்களை விட, நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள்...' என, பாராட்டினர்.
பதறிய விஜய் வர்கியா, 'அரசியலில் இருந்து மொத்தமாக ஓரம் கட்டி, நிரந்தரமா பஜனை பாடகராக்கி விடுவீர்கள் போலிருக்கிறதே...' என, புலம்பியபடியே நடையை கட்டினார்.