PUBLISHED ON : ஜூலை 17, 2025 12:00 AM

'பரவாயில்லையே... கணவராக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதில் கறாராக இருக்கிறாரே...' என, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சரும், அப்னா தளம் - எஸ் கட்சியின் தலைவருமான அனுப்ரியா படேலை பாராட்டுகின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ.,வினர்.
உ.பி.,யில், முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு குறிப்பிட்ட சில பகுதிகளில், அப்னா தளம் - எஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த கட்சியின் தலைவரான அனுப்ரியா படேல், பிரதமர் மோடி தலைமையிலான அரசில், மத்திய இணை அமைச்சராக உள்ளார்.
இவரது கணவர் ஆஷிஷ் படேல், உ.பி.,யில் முதல்வர் யோகி தலைமையிலான அரசில், தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ளார். சமீபகாலமாக, முதல்வரையும், அரசையும், ஆஷிஷ் படேல் மறைமுகமாக விமர்சித்து பேசி வந்தார்.
அவரது பேச்சு, கூட்டணியில் உள்ள பா.ஜ.,வினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது; அனுப்ரியாவின் அமைச்சர் பதவிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அப்னா தளம் கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்து, தன் கணவரை நீக்கி, துணை செயல் தலைவராக பதவி இறக்கம் செய்த அனுப்ரியா, 'இனிமேல் பா.ஜ., பற்றி வாய் திறந்தால், அவ்வளவு தான்...' என, கண்டித்துள்ளார்.
இதைக் கேள்விப்பட்ட பா.ஜ.,வினர், 'அனுப்ரியா அதிரடியான அமைச்சராக மட்டுமல்ல... அதிரடியான மனைவியாகவும் செயல்படுகிறார்...' என, பாராட்டுகின்றனர்.