PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

'குஜராத்தில் நடந்தது போல், மஹாராஷ்டிராவிலும் நடந்தால் நன்றாக இருக்கும்...' என, அங்குள்ள பொதுமக்களிடம் ஒரு முணுமுணுப்பு எழுந்துள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆகியோர், துணை முதல்வர்களாக உள்ளனர்.
சமீபத்தில் குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் பூபேந்திர படேல், தன் அமைச்சரவையை முழுமையாக மாற்றி, புதியவர்களுக்கு வாய்ப்பளித்தார்.
தற்போது, 'நாமும் இதுபோல் செய்தால் என்ன...?' என்ற யோசனை, தேவேந்திர பட்னவிசுக்கும் வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று, ஓராண்டு முடிய போகிறது.
இதில், சரியாக செயல்படாதவர்கள், ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களை கண்டறிந்து, அவர்களது அமைச்சர் பதவிகளை பறிக்க பட்னவிஸ் திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
ஆனால், காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ, 'பட்னவிஸ் தலைமையிலான அரசு, கூட்டணி அரசு. குஜராத் போல் இங்கு அதிரடி முடிவுகள் எடுக்க முடியாது; அப்படி எடுத்தால், ஆட்சி ஆட்டம் காணத் துவங்கி விடும். அமைச்சரவை மாற்றம் என்பது, வெறும் புரளியாகத் தான் இருக்கும்...' என்கின்றனர்.

