PUBLISHED ON : நவ 07, 2025 12:00 AM

'நல்லதுக்கு காலம் இல்லை...' என, பரிதாபமாக கூறுகிறார், மஹாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்த்தன் சக்பால்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மஹாராஷ்டிராவில், 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து, அங்கு காங்கிரஸ் தலைவராக இருந்த நானா படோல் மாற்றப்பட்டு, ஹர்ஷவர்த்தன் சக்பால் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மற்றவர்களை போல் இல்லாமல், மிகவும் எளிமையான அரசியல்வாதியாக வலம் வருபவர், ஹர்ஷவர்த்தன்; கட்சியின் கடைக்கோடி தொண்டர்களிடமும் தொடர்பில் இருப்பார்.
சமீபத்தில் தீபாவளி அன்று, மஹாராஷ்டிராவில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு சென்று, அங்குள்ள மக்களுடன் பண்டிகையை கொண்டாடினார், ஹர்ஷவர்த்தன்; அவர்களது வீடுகளிலும் அன்று தங்கியிருந்தார்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதும், 'விளம்பரத்துக்காக ஹர்ஷவர்த்தன் இது போன்ற வேலைகளை செய்து வருகிறார்...' என, மற்ற கட்சியினர் கிண்டல் அடித்தனர்.
ஆனால் ஹர்ஷவர்த்தனோ, 'கடந்த, 20 ஆண்டுகளாக ஒவ்வொரு தீபாவளியன்றும் பழங்குடியின கிராமங்களுக்கு சென்று, அவர்களுடன் பண்டிகையை கொண்டாடி வருகிறேன். இப்போது, நான் காங்கிரஸ் தலைவராக இருப்பதால், இந்த விவகாரம் வெளியில் தெரிந்து விட்டது; இதில் விளம்பரம் எதுவும் இல்லை...' என, புலம்புகிறார்.

