PUBLISHED ON : நவ 06, 2025 12:00 AM

'தேர்தல் இல்லாத நேரத்தில் பரபரப்பாக செயல்பட்டு விட்டு, தேர்தல் வந்ததும் வீட்டிற்குள் முடங்கி கிடந்தால் என்ன அர்த்தம்...?' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், அவர்களது கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு இன்று, முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்த கட்டம், வரும் 11ம் தேதி நடக்க உள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், காங்., - எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பீஹார் முழுதும் யாத்திரை மேற்கொண்டார்.
இதனால், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்தனர். 'இதே வேகத்தில் ராகுல் பிரசாரம் செய்தால், கண்டிப்பாக ஆட்சியை பிடித்து விடலாம்' என கூறி வந்தனர்.
ஆனால், தேர்தல் தேதி அறிவித்ததும் ராகுலை காணவில்லை. கடைசியாக செப்., 1ம் தேதி பீஹாரில் இருந்த அவர், அதன்பின் அந்த பக்கமே தலை காட்டவில்லை. இதனால், கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்த தகவல் பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து, நான்கு நாட்களுக்கு முன் தான், மீண்டும் பிரசார களத்துக்கு வந்தார், ராகுல்.
'அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியை பிடிப்பது தானே பிரதான லட்சியம். தேர்தல் நேரத்தில் ராகுல் இப்படி அலட்சியம் காட்டினால் ஆட்சியை பிடிக்க முடியுமா...?' என, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர் புலம்புகின்றனர்.

