PUBLISHED ON : பிப் 04, 2024 12:00 AM

'யாத்திரை துவங்கிய நேரமே சரியில்லையே...' என புலம்புகின்றனர், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில், வட கிழக்கு மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, இந்த யாத்திரை பெரிய அளவில் கட்சிக்கு பலம் சேர்க்கும் என, மூத்த தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
வடகிழக்கு மாநிலங்களில் கணிசமான லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்று, பா.ஜ.,வுக்கு கடும் சவாலை ஏற்படுத்த முடியும் என்றும் கூறி வந்தனர்.
ஆனால், யாத்திரை துவங்கிய அடுத்த சில நாட்களிலேயே, கட்சியின் முன்னாள் எம்.பி.,யும், தொழில் அதிபருமான மிலிந்த் தியோரா காங்கிரசில் இருந்து விலகி, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்தார்.
இதை காங்., மூத்த தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மிலிந்த் தியோரா, காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முரளி தியோரா, காங்., அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அசாம் மாநில மகளிர் காங்கிரஸ் அணியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளும், பா.ஜ.,வில் இணைந்தனர்; இவர்களில் ஒருவர், அசாம் மாநில காங்., முன்னாள் தலைவரின் மகள்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ள காங்., மூத்த தலைவர்கள், 'யாத்திரை முடிவதற்குள், இன்னும் எத்தனை பேர் கட்சியை விட்டு ஓடப் போகின்றனர் என தெரியவில்லையே...' என, கவலைப்படுகின்றனர்.