PUBLISHED ON : ஜூலை 13, 2011 12:00 AM

ராஜ்நாத் மீது அதிருப்தி!
உ.பி.,யில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. கிராமம், கிராமமாக சென்று, சூறாவளி போல, சுற்றிச் சுழன்று, தேர்தல் பணியாற்றி வருகிறார் ராகுல்.பகுஜன் சமாஜ் கட்சி, ஆளும் கட்சி என்பதால், அதிகாரம் மற்றும் பண பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது. முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியினரும், தேர்தல் கருத்து கணிப்பு, தங்களுக்கு சாதகமாக இருப்பதால், உற்சாகமாக களம் இறங்கியுள்ளனர்.பா.ஜ.,வின் நிலைமையோ, மிகவும் பரிதாபமாக உள்ளது. கட்சி நிர்வாகிகள் முதல், தொண்டர்கள் வரை அனைவருமே, உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர். தேர்தல் பணிகளுக்கான பொறுப்பாளராக, மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டது தான், இதற்கு காரணம்.இவர், மண்ணின் மைந்தர் என்றாலும், தேர்தலுக்கு இவரை முன்னிலைப் படுத்துவதை கட்சியினர் விரும்பவில்லை. ராஜ்நாத் முதல்வராக இருந்தபோது, சரியாக செயல்படவில்லை என, புகார் பட்டியல் வாசிக்கின்றனர். ராஜ்நாத் சிங், பா.ஜ.,வின் தேசிய தலைவராக இருந்த காலத்தில், உ.பி.,யில், கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்தது என்பதையும், அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.'இந்த தேர்தலை விட்டு விட்டால், ஆட்சியை பிடிப்பதற்கு, இன்னும் ஐந்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். கட்சி தொண்டர்கள் சோர்வடைந்து விடுவர். எனவே, ராஜ்நாத் விவகாரத்தை, மேலிட தலைவர்களின் காதுகளில் யாராவது ஓதினால் தான், உ.பி.,யில் இழந்த செல்வாக்கை மீட்க முடியும்' என, சோகத்தில் புலம்புகின்றனர், பா.ஜ., தொண்டர்கள்.

