
'ஏதோ ஒரு மிகப் பெரிய திட்டத்துடன் இருக்கிறார்...' என, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் குறித்து கூறுகின்றனர், பீஹாரில் உள்ள அரசியல்வாதிகள்.
பிரபல கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்து, பிரபலமானவர் பிரசாந்த் கிஷோர். இவர் தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த பல கட்சிகள், ஆட்சியை பிடித்துள்ளன. தற்போது இவருக்கும் அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளதால், ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சியை துவக்கியுள்ளார்.
சொந்த மாநிலம் பீஹார் என்பதால், அங்கேயே அரசியல் செய்யவும் முடிவு செய்துள்ளார். பீஹாரில், அடுத்தாண்டு சட்டசபைதேர்தல் நடக்கவுள்ளது.இங்கு முக்கிய கட்சிகளாக உள்ள ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்காமல், தனித்து களம் இறங்க பிரசாந்த் முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 'பீஹாரில்ஒரு சலுான் கடைக்காரரை சந்தித்து, அரசியல் நிலவரம் குறித்து கேட்டேன். அதற்கு அவர், லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது, குற்றவாளிகளின் காட்டாட்சி நடந்தது. இப்போது, நிதீஷ் குமார் முதல்வராக உள்ளபோது, அதிகாரிகளின் காட்டாட்சி நடக்கிறது என்றார்.
'இந்த மோசமான அரசியல் சூழலை மாற்றுவதற்கே, மாற்று சக்தியாக நாங்கள் களம் இறங்குகிறோம். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பர்...' என்றார்.
பீஹாரில் உள்ள அரசியல்வாதிகளோ, 'மாற்று சக்தியா, மங்கி போன சக்தியா என்பது தேர்தல் வந்ததும் தெரிந்து விடும்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.

