PUBLISHED ON : ஆக 13, 2026 01:53 AM

'தகுதியும், பொறுப்பும் இல்லாதவர்களுக்கு பதவி கொடுத்தால் இப்படித் தான் நடக்கும்...' என, திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகிய லோக்சபா எம்.பி., சயோனி கோஷ் குறித்து எரிச்சலுடன் கூறுகின்றனர், அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.
வங்க மொழியில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சயோனி கோஷ். 2024 லோக்சபா தேர்தலில் இவருக்கு, 'சீட்' வழங்கினார், அப்போதைய மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு, திரிணமுல் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பதவியும் வழங்கப்பட்டது; இது, அந்தக் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபைத் தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் தோல்வி அடைந்ததும், அந்த கட்சியைச் சேர்ந்த, 19 எம்.பி.,க்கள், தேசியவாத குடிமக்கள் கட்சி என்ற அமைப்புக்கு தாவினர். அவர்களில் சயோனி கோஷும் ஒருவர்.
சமீபத்தில் பார்லிமென்டிற்கு வந்திருந்த சயோனி கோஷ், மழை தண்ணீரை கையில் பிடித்து, சிறு குழந்தை போல் விளையாடினார்; இது குறித்த வீடியோவை, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார்.
இதைப் பார்த்த திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 'கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாதவர்களுக்கு உயர்ந்த பதவியை கொடுத்தால், அவர்களிடம் இதுபோன்ற விளையாட்டுத்தனத்தை தவிர, வேறு எதை எதிர்பார்க்க முடியும்...?' என, புலம்புகின்றனர்.
