PUBLISHED ON : அக் 15, 2026 12:00 AM

‘இவர்களை எப்படி சமாளிப்பது என தெரியவில்லையே...’ என கவலைப்படுகிறார், கர்நாடக அரசின் காங்., முதல்வர் சிவகுமார்.
கர்நாடக முதல்வராக, கடந்த ஜூனில் தான் சிவகுமார் பதவியேற்றார். அவருடன், 14 பேர் மட்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பலர், அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத் ததால், ஆகஸ் டில் தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அப்போது, 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனாலும், ஆறு முறை காங்., – எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட தன்வீர் சேட், தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் கடும் கோபத்தில் உள்ளார்.
சமீபத்தில், மைசூரில் நடந்த ஒரு விழாவுக்கு, முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகனான அமைச்சர் யதீந்திரா, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்த விழாவிற்கு தன்வீர் சேட்டும் வந்திருந்தார்.
நீண்ட நேரமாக யதீந்திரா வராததால் கடும் கோபமடைந்த தன்வீர் சேட், ‘பல ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. ஆனால், சித்தராமையாவின் மகன் என்பதற்காக யதீந்திராவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர். அவர் வருகைக்காக நான் காத்திருக்க வேண்டுமா...?’ என ஆவேசமாக கூறிவிட்டு, அங்கிருந்து வெளியேறினார்.
இதையறிந்த முதல்வர் சிவகுமார், ‘இவர்களுக்கு மத்தியில் என் முதல்வர் பதவியை தக்க வைப்பது, ரொம்ப சிரமமாக இருக்கும் போலிருக்கிறதே...’ என புலம்புகிறார்.
