PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

‘இவருக்குள் இவ்வளவு திறமைகளா...?’ என, கேரள மாநில அரசின் காங்கிரஸ் முதல்வரான சதீசன் குறித்து ஆச்சரியப்படுகின்றனர், அம்மாநில மக்கள்.
கேரளாவில், கடந்த ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடந்தது. பிரசாரத்தில் பேசிய சதீசன், ‘கண்டிப்பாக இந்த தேர்தலில் காங்., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்; அப்படி நடக்காவிட்டால், நான் வனவாசம் சென்று விடுவேன்...’ என்றார்.
அவர் கூறியது போலவே, காங்., ஆட்சியை பிடித்தது; சதீசன் முதல்வராக பதவியேற்றார். சமீபத்தில் சதீசனை சந்தித்த பத்திரிகையாளர்கள், ‘இந்த தேர்தலில் காங்., வெற்றி பெறாமல் போயிருந்தால், நிஜமாகவே வனவாசம் சென்றிருப்பீர்களா...?’ என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சதீசன், ‘அதில் என்ன சந்தேகம்; எனக்கு காடுகள் என்றால் மிகவும் பிடிக்கும். காடுகளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். அங்குள்ள யானைகளின் சாணம் மிகவும் முக்கியமானது.
‘அது, பூச்சிகளின் வாழ்விடமாகவும், பறவைகளுக்கு உணவாகவும் விளங்குகிறது; சுற்றுச்சூழலுக்கும் முக்கியமானது. யானை சாணத்தை அப்புறப்படுத்தினால், காடுகளின் செழிப்பு குறைந்து விடும்...’ என்றார்.
இதை கேள்விப்பட்ட கேரள மக்கள், ‘இவர் அரசியலுக்கு வராமல், சுற்றுச்சூழல் ஆர்வலராக செயல்பட்டிருந்தால், காட்டுக்கும் நன்மை கிடைத்திருக்கும். அவர் தேர்தலில் தோற்றிருந்தாலும், யாரும் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள்...’ என்கின்றனர்.
