PUBLISHED ON : ஆக 23, 2025 12:00 AM

'டில்லி முதல்வராக இருப்பவர்களுக்கும், அடி, உதைக்கும் அப்படி என்னதான் தொடர்போ என தெரியவில்லை...' என்று ஆச்சரியப்படுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
டில்லியில், முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி வகித்தார். அப்போது, அவரை குறிவைத்து பல தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.
கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது அல்லது பேரணியில் நடந்து செல்லும்போது, யாராவது ஒருவர் ஓடி வந்து, கெஜ்ரிவாலின் முகத்தில் ஓங்கி அறைந்துவிட்டு செல்வது வழக்கமாக இருந்தது.
அதேபோல், கெஜ்ரிவால் மீது கருப்பு மையை தெளித்த சம்பவங்களும் அரங்கேறின. தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை ஒருபக்கம் நடந்தாலும், கெஜ்ரிவால் அறை வாங்கும் நிகழ்வுகள் தொடர்ந்தன.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ரேகா குப்தா முதல்வராக உள்ள நிலையில், அவரிடம் மனு கொடுப்பது போல் நெருங்கி வந்த ஒருவர், சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினார். இதில் காயமடைந்த ரேகா குப்தா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதை கேள்விப்பட்ட டில்லி அரசியல்வாதிகள், 'டில்லி முதல்வராக பதவி வகிப்போர், மஹாபாரதத்தில் வரும் கர்ணன் போல், கவச குண்டலத்துடன் தான் வெளியில் வர வேண்டும் போலிருக்கிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.