/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தடாக தாமரையில் உதித்த தனிமலர் 'தினமலர்'
/
தடாக தாமரையில் உதித்த தனிமலர் 'தினமலர்'
PUBLISHED ON : டிச 19, 2025 12:34 AM

பத்திரிகை தர்மத்தை பாங்குடனே பறைசாற்றி, உலகளாவிய உண்மைகளை உரக்கச் சொல்லும் ஊடகம்; உள்ளம் அனைத்தும் கொள்ளை கொள்ளும் உன்னத ஊடகம்;
எட்டிரண்டு பக்கங்களை தன்னகத்தே கொண்டு, தரணி எங்கும் புகழ்மணத்தை பரப்புகின்ற மண மலர்; அச்சமில்லாமல் அரசியல் பேசும் அற்புத 'தினமலர்'.
எழுபத்தைந்து ஆண்டுகள் நல் எழுச்சியை ஏற்படுத்தி, எண்ணிலடங்கா வாசகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய செய்திமலர்.
''தினந்தோறும் வாங்குவேன் இதயம்,'' என சொல்பவர்கள் பலர்;
''தினந்தோறும் வாங்கினேன் தினமலர்,'' என கூறி மகிழ்பவர்கள் பலர்.
என் இதயத்திலும் நுழைந்து என்னையும் வாசகராக்கி அனுதினமும் அன்றாட நிகழ்வுகளையும் அறிய வைத்த செய்திகளின் அட்சய பாத்திரம், பவளவிழா நாயகியாம் தினமலருக்கு மனமிகுந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
அதிகாலையிலே அனைத்து இல்லங்களுக்கும் சென்று இன்றைய செய்திகளையும் இனிய நிகழ்வுகளையும் பறைசாற்றி, அவசர யுகத்தைத் தன் பக்கத்திலே புரட்டச் செய்த எழுத்துகளின் தொகுப்பாளன்; பத்திரிகையின் பகுப்பாளன்; பன்முகச் செய்தியாளன்; பகட்டான அறிவிப்பாளன்; அதுவே 'தினமலர்' எனும் பேர் பெற்ற பேராளன்;
'அரசியல்' பக்கத்தில் ஆரவாரமும், ஆர்ப்பரிப்புமாக அலைபாயும் அரசியல் செய்திகள்.
டீக்கடை பெஞ்சில் குப்பண்ணாவின் குற்றச்சாட்டுகள். டவுட் தனபாலின் டவுட்டில் நறுக் கேள்விகள்.
'லாபம்' மற்றும் 'தொழில்' பக்கங்களில் நம்மைப் போன்ற தொழில் அதிபர்களின் வர்த்தக செய்திகளும் வாணிப விபரங்களும் என பக்கத்திற்குப் பக்கம்
விறுவிறுப்பு. மிக வியப்பு.
நாளிதழை ஒட்டி வரும் ஆன்மிக மலர், சிறுவர்மலர், வாரமலர் இதழ்களும் அருமை.
அதர்மத்தை மீறி, தர்மத்தை தலை தூக்கச் செய்யும் தர்மத்தின் பாதையில் சமூகத்தை வழி நடத்திச் செல்லும் 75 ஆண்டு கால மூத்த முதிர்ந்த பத்திரிகையாம் தினமலருக்கு வாசகன் என்ற முறையிலும் ரசிகன் என்ற முறையிலும் வாழ்த்துக்கள் பல!
ஊடக தர்மம் தழைத்தோங்க, தினமலர் தினந்தோறும் மலரட்டும்!
புகழ் நூற்றாண்டு கடக்கட்டும் என வாழ்த்தும்....
வி.ஆர். முத்து
தலைவர், இதயம் குழுமம்

