PUBLISHED ON : ஏப் 14, 2025 12:00 AM

'பா.ஜ.,வின் அடுத்த குறி நீங்கள் தான்...' என பீதியை கிளப்பி, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாகேலின் துாக்கத்தைக் கெடுத்து வருகின்றனர், அவரது நண்பர்களும், ஆதரவாளர்களும்.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இவருக்கு முன் முதல்வராக இருந்தவர் தான், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூபேஷ் பாகேல்.
இவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல், முறைகேடுகளை எல்லாம் தற்போது தோண்டி எடுத்து வருகிறது, மத்திய அரசு. பூபேஷ் பாகேல் முதல்வராக இருந்தபோது மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது.
இந்த வழக்கை, அமலாக்கத்துறை தற்போது கையில் எடுத்துள்ளது. பூபேஷ் பாகேல் மற்றும் அவரது மகன் சைதன்யா உள்ளிட்டோருக்கு தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், முறைகேடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ஏராளமான பணம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை வைத்து, பூபேஷ் பாகேலையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் வளைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
'டில்லியில் முதல்வராக இருந்த, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலை இப்படி தான் சீரழித்தனர். இப்போது, பா.ஜ., மேலிடத்தின் கழுகு கண்களில் நீங்கள் சிக்கியுள்ளீர்கள். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் கைது செய்யப்படலாம்...' என பலரும், தினமும் 'பொடி' துாவுவதால், பீதியில் உள்ளார், பூபேஷ் பாகேல்.

