உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மக் மேளா, கும்பமேளாவின் ஒரு சிறிய வடிவமாகக் கருதப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி 'மக்' மாதத்தில் (தை மாதம்) தொடங்கும் இந்தத் திருவிழா, சுமார் 45 முதல் 50 நாட்கள் வரை நீடிக்கும்.
மக் மேளாவின் மிக முக்கியமான நிகழ்வு இங்கே உள்ள கங்கை, யமுனை மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமத்தில் நீராடுவதாகும். மக் மாதத்தில் சங்கமத்தில் நீராடுவது ஒருவரின் பாவங்களைப் போக்கி, மறுபிறவியிலிருந்து விடுதலை (மோட்சம்) அளிக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக மகர சங்கராந்தி, மௌனி அமாவாசை மற்றும் வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கே இதற்காகவே குவிகிறார்கள்.
ஆணும் பெண்ணுமாக இங்கே நிறைய பேர் இந்த விழா காலங்களில் கரையிலேயே தங்கியிருந்து தெய்வ சிநதனையில் பொழுதை கழிப்பர் ஒரு வேளை உணவு மூன்று வேளை குளியல் பகல் முழுவதும் தியானம், பஜனை மற்றும் சத்சங்கங்களில் என்றிருப்பர் மொபைல் போனை முற்றிலும் தவிர்த்துவிடுவர், இவர்களை கல்பவாசிகள் என்பர் இவர்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மக் மேளாவில் உடலெங்கும் சாம்பல் பூசி, ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் நாகா சன்னியாசிகள்,மக் மேளா காலத்தில் மட்டும் பொதுவெளியில் தோன்றி புனித நீராடும் அகோரிகள்,நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மடாதிபதிகள் மற்றும் குருக்கள் ஆகியோர்களால் மேளா களைகட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்த ஆண்டு மக் மேளாவிற்காக உத்தரப் பிரதேச அரசு பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளது: பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான கூடாரங்கள், தற்காலிகச் சாலைகள் மற்றும் மின்விளக்கு வசதிகளுடன் ஒரு குட்டி நகரமே உருவாக்கப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதால், செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் கூட்ட நெரிசல் கண்காணிக்கப்படுகிறது. 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் கங்கை நதியைப் புனிதமாக வைத்திருக்க ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பிரயாக்ராஜ் மக் மேளா என்பது வெறும் மதச்சடங்கு மட்டுமல்ல; அது இந்தியப் பண்பாடு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் அடையாளம். குளிர் காலத்தின் கடுமையையும் பொருட்படுத்தாமல், பனியில் நனைந்து சங்கமத்தில் நீராடும் பக்தர்களின் நம்பிக்கை, பாரதத்தின் ஆன்மீக வலிமையை உலகுக்குப் பறைசாற்றுகிறது.